அறிமுகம்

கூந்தல் வளர்ச்சிக்காக, தலைக்கு மூலிகை எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல பெண்களிடம் உள்ளது. ஆண்களும் முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகளுக்காக மூலிகை எண்ணெய்களை பயன்படுத்துகிறார்கள். பெரிய பிராண்ட் நிறுவனங்கள் போட்டி களத்தில் இருந்தாலும், தரமான மூலிகை எண்ணெய் தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய் லிட்டர் ரூ. 180

வெந்தயம் கிலோ ரூ. 60

சீரகம் கிலோ ரூ. 60

கஸ்தூரி மஞ்சள் கிலோ ரூ. 110

பூலாங்கிழங்கு கிலோ ரூ. 200

வெட்டிவேர் கிலோ ரூ. 140

விளாமிச்சை வேர் கிலோ ரூ. 180

கருவேப்பிலை கிலோ ரூ. 20

பொன்னாங்கண்ணி கிலோ ரூ. 10

கீழாநெல்லி வேர் ரூ. 12

திருநீற்று பச்சிலை

கரிசலாங்கண்ணி

சோற்று பச்சிலை

நெல்லி

சோற்று கற்றாழை

கட்டமைப்பு

மூலிகை காய்ச்ச விறகு அடுப்பு அல்லது பெரிய பர்னர் உள்ள கேஸ் சிலிண்டர் அடுப்பு

தைலத்தை பாட்டிலில் ஊற்றி பேக்கிங் செய்து இருப்பு வைக்க ஒரு அறை

பச்சிலைகள் வளர்க்க 10 x 10 அடி நீள, அகல காலி இடம் (வீட்டு முற்றமாகக் கூட இருக்கலாம்), அதே அளவில் மூலிகை பொருட்களை காய வைக்க திறந்த வெளி தேவை

மூலப் பொருட்கள்

ஆட்டு உரல் அல்லது கிரைண்டர்

மூலிகை காய்ச்ச இரும்பு சட்டி

காய்ச்சிய தைலத்தை ஊற்றி வைக்க காலி டின்கள்

உற்பத்தி பொருட்கள்

ஹேர் ஆயில் பேக்கிங் செய்ய 30 மி.லி., 60 மி.லி., 100 மி.லி. உள்ளிட்ட பல்வேறு கொள்ளளவுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள்

லேபிள்கள்

உற்பத்திக்கு தேவையான மூலிகை மற்றும் பச்சிலை

கிடைக்கும் இடம்

காலி டின்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளிலும், மூலிகை மற்றும் பச்சிலை நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கிராமப்புறங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் இருந்தும் மூலிகைகள் மற்றும் பச்சிலைகளை பெறலாம்.

விற்பனை வாய்ப்பு

டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், நாட்டு மருந்து கடைகள், மளிகைக் கடைகள், கூட்டுறவு கடைகள் ஆகியவற்றில் ஹேர் ஆயில் விற்கப்படுவதால் அங்கு சப்ளை செய்யலாம். தெரிந்தவர்கள், அருகில் இருப்பவர்களிடம் நாமே நேரடியாக விற்கலாம். நல்ல தரத்தோடு தயாரிக்கும் போது பலன் நன்றாக தெரியும். விலையும் ஏற்றபடி இருந்தால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். அதற்கேற்ப விற்பனை அதிகரிக்கும். நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். பயிற்சி தேவை இல்லை.

தயாரிக்கும் முறை

தலா 50 கிராம் வெந்தயம், சீரகம், கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, வெட்டி வேர், விளாமிச்சை வேர் ஆகியவற்றை 24 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து எடுத்து கொள்ள வேண்டும். தலா 50 கிராம் கருவேப்பிலை, திருநீற்று பச்சிலை, பொன்னாங்கண்ணி, கீழாநெல்லிவேர், கரிசலாங்கண்ணி, நெல்லி சாறு, செம்பருத்தி ஆகியவற்றை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் எடுத்து கொள்ள வேண்டும்.

50 கிராம் கற்றாழை ஜெல் எடுத்து கொள்ள வேண்டும். அனைத்தையும் ஆட்டு உரல் அல்லது கிரைண்டரில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்க வேண்டும். உளுந்த மாவு பதத்துக்கு வந்தவுடன் அதை வடை போல் தட்ட வேண்டும்.

இரும்பு சட்டியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் அதில் வடை போல் தட்டியதை போட வேண்டும்.

அவை எண்ணெயில் வெந்து உதிரும். சாறு முழுவதும் எண்ணெயில் இறங்கி கலந்து விடும். எண்ணெய் ஈரப்பதம் இல்லாத நிலைக்கு மாறியவுடன் தீயை அணைத்து விட வேண்டும். சூடு ஆறியதும் எண்ணெயை வடிகட்டி தகர டின்னில் ஊற்றினால் ஹேர் ஆயில் தயார். எண்ணெயை தேவையான அளவுள்ள பாட்டில்களில் அடைத்து, லேபிள் ஒட்டி விற்கலாம்.

பக்குவம் முக்கியம்

கொதிக்கும் எண்ணெயில் வடை போல் போட்டவற்றை முறுகும் வரை வேக வைத்து விட்டால், வடையின் துகள்களே எண்ணெயை உறிஞ்சி கொள்ளும். எண்ணெய் அளவு குறைந்து விடும். முறுகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சீக்கிரமே தீயை அணைத்து விட்டால் முழுமையான மூலிகை எண்ணெயாக மாறாது. எண்ணெய் முழுவதும் மூலிகை எண்ணெயாக மாறிவிட்டதை அறிய, வடை வெந்து கொண்டிருக்கும் போது, ஒரு திரியை சட்டியில் உள்ள எண்ணெயில் நனைத்து பற்ற வைக்க வேண்டும். எண்ணெய் ஈரப்பதமாக இருந்தால் சடசடவென சத்தம் வரும். சரியாக எரியாது. திரி சத்தமில்லாமல் எரிந்தால் மூலிகை எண்ணெய் பக்குவத்திற்கு வந்து விட்டது என்பதை அறிந்து உடனே தீயை அணைத்து விடலாம்.

கூந்தல் வளர்ச்சிக்காக, தலைக்கு மூலிகை எண்ணெய் தேய்க்கும் பழக்கம் பல பெண்களிடம் உள்ளது. ஆண்களும் முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகளுக்காக மூலிகை எண்ணெய்களை பயன்படுத்துகிறார்கள். பெரிய பிராண்ட் நிறுவனங்கள் போட்டி களத்தில் இருந்தாலும், தரமான மூலிகை எண்ணெய் தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் .

ஆதாரம்: தொழில்யுகம் மாத இதழ்