கிராமப்புறங்கள் மட்டுமன்றி நகரங்களிலும் மொட்டை மாடியிலும், வீட்டின் பின்புறங்களிலும் தோட்டம் அமைத்து காய்கறிச் செடி வளர்ப்பது அதிகரித்து வருகிறது. இத்தகைய தோட்டங்களுக்கு அதிக விலை கொடுத்து உரங்கள் வாங்காமல் வீட்டுக் கழிவுகளிலிருந்தே உரம் தயாரித்து பயன்படுத்தலாம். இது, மண் வளத்துக்கும் செடிகளுக்கும் ஆரோக்கியம் அளிக்கும்.

இயற்கை உர தயாரிப்பு

அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல், கழிவுகள் போன்றவற்றையே சிறந்த உரமாக்கலாம்.

வெங்காயம், உருளைக்கிழங்கு தோல், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக்கழிவுகள் போன்றவற்றை குப்பையில் கொட்டாமல், வீட்டின் பின்புறம் குழி தோண்டி, அதில் இவற்றைக் கொட்டி மண்ணைத் தூவினால் உரக்குழி தயார்.

இதே போல் பயன்படுத்தப்பட்ட டீ தூள், முட்டை ஓடுகள், கால்நடைகளின் சாணம் கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகிறது.

மாடி வீட்டில் வசிப்போர் உடைந்த மண் சட்டி அல்லது பக்கெட்டில் மண் இட்டு இந்த இயற்கை உரம் தயாரிக்கலாம்.

இக்கழிவு நல்ல வெயில் படும்படி இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால் கழிவுப் பொருள்களில் உள்ள சத்து எல்லாம் ஒன்றாகி மக்கி உரமாகும்.

இதை உரமாக இடும் போது செடிகள் நன்றாக வளரும்; சுவையான காய்கறி கிடைக்கும்.

பூங்கா கழிவுகள்

மக்கும் இலைகள், பெரிய பூங்கா மற்றும் தோட்டங்களில் உதிர்ந்து கிடக்கும் இலை, தழைகளை சேகரித்து வீட்டுத் தோட்டத்தில் ஒரு மூலையில் குவிக்க வேண்டும்.

அவற்றை மக்கவைக்கும் முன்பாக சிறுசிறு துகள்களாக்க வேண்டும்.

இக்கழிவுகளில் இருக்கும் கரிமச்சத்து, தழைச்சத்து விகிதம்தான் மக்கும் முறையை நிர்ணயிக்கும் காரணிகள்.

எனவே, கரிமச்சத்து, தழைச்சத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும். அதாவது பச்சை, காய்ந்த கழிவுகளைச் சேர்த்து கலக்க வேண்டும். சமையலறை காய்கறிக் கழிவுகள், பழுப்புக் கழிவுகள் - வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புற்கள் இவ்விரண்டையும் கலந்து வைப்பதன் மூலம் குறைந்த காலத்தில் மக்கச் செய்ய முடியும்.

ஆக்ஸிஜன்

கம்போஸ்ட் குழிகளில் ஆக்ஸிஜன் அதிகமிருந்தால் தான் நுண்ணுயிர்களின் செயல்பாடு தூண்டப்படும்.

எனவே, குழியில் காற்றோட்டம் ஏற்படுத்த குழியின் பக்கவாட்டிலிருந்து அல்லது செங்குத்தான நிலையில் குழாய்களைப் பொருத்தலாம்.

15 நாளுக்கு ஒருமுறை கழிவுகளைக் கிளறுவதால் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ள கழிவுகள் கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாடு துரிதப்படும்.

ஈரப்பதம்

எந்த சூழ்நிலையிலும் கம்போஸ்ட் குழிகளில் ஈரப்பதம் குறையக்கூடாது. இல்லையெனில், நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மக்கும் தன்மை பாதிக்கப்படும்.

மக்கிய உரம் முதிர்வடைதல்

இத்தொழில்நுட்ப முறைகளில் 30 நாள்கள் கம்போஸ்ட் குழிகளில் வைக்கப்படும் இக்கழிவானது முதிர்வடையும் நிலையை எட்டும். முதிர்வடைந்த மக்கிய உரமானது, அளவு குறைந்தும், கருப்பு நிறமாகவும் காணப்படும்.

முதிர்வடைந்த மக்கிய உரத்தைக் கலைத்து தரையில் விரித்து, மறுநாள் 4 மி.மீ. சல்லடையால் சலித்து எடுத்துவைத்துக் கொள்ளலாம்.

செறிவூட்டப்பட்ட உரம் அறுவடை செய்யப்பட்ட மக்கிய உரத்தை நிழலில் கடினமான தரையில் குவித்து நுண்ணுயிர்களான அசோடோபேக்டர், சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா 0.02 சதவீதம், ராக்பாஸ்பேட் 0.2 சதவீதம் ஆகியவற்றை 1 டன் மக்கிய உரத்துடன் கலந்து, 60 சதம் ஈரப்பதம் இருக்கும்படி 20 நாள்கள் வைப்பதால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரம் செறிவூட்டப்பட்டது. இந்த உரம் சாதாரண மக்கிய உரத்தைவிட ஊட்டச்சத்து அதிகமாகவும், நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அதிகமாகவும், தாவர வளர்ச்சியைத் தூண்டவும் உதவும்.

வீட்டிலிருக்கும் உடைந்த பிளாஸ்டிக் வாளிகளில்கூட இதுபோன்ற இலைக்கழிவைப் போட்டு மக்கிய உரம் தயாரிக்கலாம். அதாவது, பிளாஸ்டிக் வாளி மக்கச் செய்யும் பயிர்க்குழிபோல் செயல்படும்.

ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மை