கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (செர்விக்கல் கேன்சர்) என்பது உலக அளவில் பெண்களை பாதிக்கும் 4-வது முக்கிய புற்றுநோய். இந்தியாவில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது 2-வது முக்கிய புற்றுநோய். உலக அளவில் மற்றும் இந்தியாவில், இதனால் பாதிக்கப்படுவோர் அதிகம். முன்கூட்டியே கண்டறியப்பட்டால் கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுக்கவும் குணப்படுத்தவும் முடியும். புற்றுநோய் ஏற்படுவதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில், தடுப்பூசியால் தடுக்கக்கூடிய ஒரே புற்றுநோய் கர்ப்ப வாய் புற்றுநோய் என்பது குறிப்பிடத்தக்கது. கர்ப்ப வாய் புற்றுநோய் என்பது ஹுமன் பாபிலோ வைரஸ் (Human Pappillovirus HPV) என்ற ஒரு வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடியது. எச்பிவி தடுப்பூசி மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க முடியும். இதனை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லாண்ட் பல்கலைக்கழகத்தில், இயான் ஃப்ரேசர் (Ian Frazer) என்ற ஆஸ்திரேலிய மருத்துவ விஞ்ஞானி, 2006ம் ஆண்டு HPV கிருமிக்கு தடுப்பூசியை முதலில் கண்டுபிடிக்க, தொற்றுநோய்களுக்கு மட்டுமல்ல... புற்றுநோய்க்கும் எதிராகவும் முதன்முதலாக ஒரு தடுப்பூசி கண்டறியப்பட்டது மருத்துவ வரலாற்றின் முக்கியமான மைல்கல்லாகவே மாறியது. இந்த ஹெச்பிவி தடுப்பூசிகள், மற்ற தடுப்பூசியைப் போல நோயை ஏற்படுத்தாமல், நேரடியாக நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து, வைரஸ் தொற்றை 99.7% வரை தவிர்ப்பதுடன், 90% கருப்பைவாய் புற்றுநோயையும், மற்ற பாதிப்புகளையும் தடுக்கின்றன 9 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு ஒரு முறை எச்பிவி தடுப்பூசியை செலுத்துவதற்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு பரிந்துரைத்துள்ளது. பெண்ணின் வயது கூடும் போதோ, திருமண வாழ்க்கைக்குப் பிறகோ இந்த தடுப்பூசி செயல் (efficacy) குறைகிறது என்பதால் பெண்கள் தங்கள் பதின்பருவத்திலேயே போட்டுக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) தடுத்தல் மற்றும் எச்பிவி தடுப்பூசி (HPV Vaccine) செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்தும் நாடு முழுவதும் உள்ள மாணவிகளிடையே விழிப்புணர்வை தேவை.