ஒரு துளி நீரில் அதிக விளைச்சல் 'ஒரு துளி நீரில் அதிக விளைச்சல்' திட்டம், பாசனத்திற்கான நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் திறனை அதிகரிக்கவும், வேளாண் உற்பத்தித்திறனை உயர்த்தவும், நுண்ணீர்ப்பாசன முறைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2026 ஜூலை நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் 115 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு நுண்ணீர்ப்பாசனக் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நேரடிப் பலன் பரிமாற்றம் மற்றும் டிஜிட்டல் நடைமுறைகள் மூலம் நிதியுதவி அளிக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், குறைந்த செலவிலான பாசன வசதிகளை விவசாயிகள் எளிதாகப் பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மகசூல் அதிகரிப்பு, கணிசமான நீர் சேமிப்பு, குறைவான சாகுபடிச் செலவு மற்றும் விவசாயிகளின் வருவாய் உயர்வு ஆகியவற்றைத் தற்சார்பு மதிப்பீட்டு ஆய்வுகளின் முடிவுகளும் உறுதிப்படுத்துகின்றன. ஒவ்வொரு துளி நீரையும் திறம்படப் பயன்படுத்துவதன் மூலம், வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நிலையான வேளாண் நடைமுறைகளை இத்திட்டம் வலுப்படுத்துகிறது. பாசன நீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துவது தேசிய முன்னுரிமை இந்தியாவில் கிடைக்கக்கூடிய பயன்பாட்டு நீர் வளங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான தண்ணீர் விவசாய நீர்ப்பாசனத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், நாட்டின் நிகர சாகுபடிப் பரப்பளவில் 50 சதவீதம் மட்டுமே நீர்ப்பாசன வசதியைப் பெற்றுள்ளது. எனவே, பாசன நீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துவது தேசிய முன்னுரிமை சார்ந்த நடவடிக்கையாக மாறியுள்ளது. இதற்கு நுண்ணீர்ப்பாசனம் ஒரு மிகச்சிறந்த தீர்வாக விளங்குகிறது. நுண்ணீர்ப்பாசனத்திற்கு மத்திய அரசு மானியம் இத்திட்டத்தின் கீழ், நுண்ணீர்ப்பாசன அமைப்புகளை நிறுவ ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஹெக்டேர் வரை மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 55 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 45 சதவீதமும் மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காகக் கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.8,123.24 கோடி நிதியை விடுவித்துள்ளது. சில மாநில அரசுகளும் கூடுதலாகத் தங்களது பங்களிப்பு மானியங்களை வழங்குகின்றன. மேலும், விவசாயிகள் தாங்கள் பயன்பெற்ற அதே நிலத்திற்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற முடியும். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2304480®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்