நோக்கம்

"பொறுமை இல்லாத விவசாயிகள்தான், அதிக மகசூலுக்கு ஆசைப்பட்டு ரசாயனங்களை அள்ளிக் கொட்டுகிறார்கள். அப்படி கொட்டினால் முதல் அறுவடையில் நல்ல மகசூல் கிடைக்கும். அடுத்தடுத்து இப்படி செய்வதால், மண் மலடாகி மகசூல் குறைந்துக்கொண்டே போகும். ஆனால், இயற்கை விவசாயத்தில் அப்படியில்லை. நாளாக நாளாக மகசூல் கூடத்தான் செய்யுமே ஒழிய குறையாது. அதோட, பாரம்பர்ய ரகங்களை விதைத்தால் கண்டிப்பாக லாபம் கிடைக்கும்”

மூலிகைப் பூச்சிவிரட்டி

காட்டாமணக்கு,

நொச்சி,

ஆடாதொடை,

வேம்பு போன்ற இலை,

தழைகளை ஐந்து கிலோ அளவுக்கு எடுத்து, ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு, 10 லிட்டர் மாட்டுச்சிறுநீர் கலந்து ஏழு நாட்களுக்கு ஊற வைக்கவேண்டும்.

அதன் பிறகு, வடிகட்டி பயிர்களுக்குத் தெளிக்கலாம். மாட்டுச்சிறுநீர் என்பது அருமையான கிருமிநாசினி.

இதைக் கலப்பதால் புழு, பூச்சிகள் விரைவாகக் கட்டுப்படும். மாட்டுச்சிறுநீர் கிடைக்காவிட்டால், தண்ணீர் சேர்த்தும் தயாரிக்கலாம்.

பத்து லிட்டர் நீருடன் ஒரு லிட்டர் பூச்சிவிரட்டியைக் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம். ஏழு நாட்களுக்கு மேல் ஊறவைத்தால்,

இது பயிர் வளர்ச்சி ஊக்கியாக மாறிவிடும். இதை வீணடிக்காமல் பயிருக்குத் தெளிக்கலாம்.

ஜீவாமிர்தம்

பசுஞ்சாணம் 10 கிலோ

மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர்,

வெல்லம் 2 கிலோ,

பயறு மாவு (உளுந்து,

துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ,

தண்ணீர் 200 லிட்டர்

இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால், ஜீவாமிர்தம் தயார். இது ஓர் ஏக்கருக்கான அளவு. இந்தப் பயிர் வளர்ச்சி ஊக்கியை பாசன நீரிலேயே கலந்து விடலாம்.

நெல்லை சாகுபடி செய்யும் விதம்

ஒரு ஏக்கருக்கு 10 சென்டில் நாற்றங்கால்

கிச்சலி சம்பா ரக நெல்லின் வயது 135 முதல் 150 நாட்கள். இது கதிர் முற்றிய நிலையில் காற்றடித்தால் கூட சாயாத உறுதித் தன்மையைக் கொண்டது. அனைத்து மண்வகைகளும் இந்த ரகத்துக்கு ஏற்றவை. ஓர் ஏக்கர் பரப்பில் விதைக்க, 10 சென்ட் பரப்பில் மேட்டுப்பாத்தி முறையில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். பாத்தி முழுவதும் விழுமாறு ஆட்டு எரு, மாட்டு எரு மற்றும் வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை சம அளவில் கலந்து தூவி விட வேண்டும். 3 கிலோ விதைநெல்லுடன் அரை கிலோ அசோஸ்பைரில்லத்தைக் கலந்து மூன்று நாட்கள் வைத்திருந்து அதை நாற்றங்காலில் தூவி தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும். விதைத்த 3-ம் நாளில் இருந்து 10 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து தொடர்ந்து தெளிக்க வேண்டும். 22-ம் நாளுக்கு மேல் எடுத்து வயலில் நடவு செய்யலாம்.

நாற்று தயாராகும்போதே நடவு வயலையும் தயார் செய்து விட வேண்டும். தேர்வு செய்த ஓர் ஏக்கர் நிலத்தை நன்கு உழுது சமப்படுத்த வேண்டும். பிறகு, ஒரு டன் தொழுவுரத்தைக் கொட்டி பரப்ப வேண்டும். பிறகு, நிலத்தை சேறாக்கி 25 சென்டி மீட்டர் இடைவெளியில் ஒற்றை நாற்று நடவு முறையில் நடவு செய்ய வேண்டும். நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.

நாற்று நடவு செய்த 10, 25, 40 மற்றும் 55-ம் நாட்களில் 200 லிட்டர் ஜீவாமிர்த கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். 25-ம் நாள் கோனோவீடர் மூலம் களைகளை அழுத்தி விட வேண்டும். 30-ம் நாளில் எஞ்சியுள்ள களைகளை ஆட்கள் மூலம் அகற்றி விட்டு இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகளை தேவையான அளவு கொடுக்க வேண்டும். ஜீவாமிர்தத்தை இலைவழித் தெளிப்பாகவும் கொடுக்கலாம். நெற்கதிர், பால் பிடிக்கும் சமயத்தில் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். 135-ம் நாளுக்கு மேல் கதிர் முற்றத் தொடங்கும். முற்றிய பிறகு, நிலத்தைக் காயவிட்டு அறுவடை செய்யலாம்.”

அனைத்து மண்ணிலும் வளரும் - 150 நாள் வயது

ஏக்கருக்கு 3 கிலோ விதை

ஏக்கருக்கு 2,400 கிலோ மகசூல்

ஆதாரம்: பசுமை விகடன்