விதை நேர்த்தி

விதைப்புக்கென வைத்திருக்கும் விதைகளில் வீரியம் குறைந்த விதைகளை பிரித்து எடுக்க 15 லிட்டர் கொள்ளளவுடைய பிளாஸ்டிக் வாளியில் 10 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒருநல்ல முட்டையை போடவேண்டும். முட்டை நல்ல எடையுடன் இருப்பதால் தண்ணீரில் மூழ்கிவிடும் பின்பு சமையல் உப்பை சிறிது சிறிதாக தண்ணீரில் போட்டு கரைக்க வேண்டும். உப்பு கரைந்து நீரின் அடர்த்தி அதிகமாவதால் முட்டை தண்ணீரின் மேலே மிதந்துவரும் முட்டையின் மேற்பகுதி 50 பைசா அளவுக்கு தண்ணீரின் மேல் தெரியும்போது உப்பை கரைப்பதை நிறுத்தி விடவேண்டும். அந்த நிலையில் தண்ணீரின் அடர்த்தி நெல் விதையை தரம் பிரிப்பதற்கு ஏற்றதாக அமைகிறது.

இவ்வாறு தயாரித்த உப்பு கரைசலில் 10 கிலோ நெல் விதைகளை சிறிது சிறிதாக கொட்டும்பொழுது எடை குறைந்த நெல் விதைகள் உப்பு கரைசலில் மிதக்கும். அதே சமயம் எடை அதிகமான தரமான நெல் விதைகள் கரைசலில் மூழ்கிவிடும். மிதக்கும் விதைகளை நீக்கிவிட்டு மூழ்கிய விதைகளை வெளியே எடுத்து இரண்டு மூன்று முறை நீரில் கழுவி விதைகளின் மேல் படர்ந்த உப்பை நீக்கிவிட வேண்டும்.

தரம் பிரித்த விதைகளை சூடோமோனஸ் புளுரசென்ஸ் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின் 24 மணி நேரத்திற்கு மூட்டம் போட்டு முளைக்கட்டிய விதைகளை விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.

பாய் நாற்றங்கால்

ஒரு எக்டர் நடவு செய்ய 100 சதுர மீட்டர் பரப்பில் பாய் நாற்றங்கால் அமைக்க சமமான இடத்தை தேர்வு செய்து பாசன நீர் ஆதாரத்திற்கு அருகில் சற்று உயரமான மண் படுக்கைகளை அமைக்க வேண்டும். நாற்று படுக்கையின் அகலம் நாற்றுகளை இலகுவாக பராமரிக்கக் கூடிய அளவில் ஒரு மீட்டர், நீளம் வயலின் அமைப்பிற்கேற்றார்போல அமைத்துக் கொள்ளலாம். படுக்கையின் மீது பிளாஸ்டிக் விரிப்பு அல்லது பாலீத்தீன் தாள்கள் கொண்டு பரப்புவதனால் நாற்றின் வேர்கள் மண்ணில் இறங்கி கீழ் நோக்கி செல்வது தடுக்கப்படுகிறது.

பாய் நாற்றங்காலில் பாலீதீன் தாளினை விரித்து அதன் மேல் 1.5 அடி நீளம் 1 அடி அகலம் 5 செ.மீ உயரம் அளவுள்ள செல்வகங்களை (அகல வாக்கில் இரண்டு செவ்வகமும், நீள வாக்கில் நான்கு செவ்வகமும் உடைய) மரச்சட்டத்தினை வைத்து அதில் தேவையான மண் கலவையை பரப்ப வேண்டும். மண் கலவையில் 70 சதம் நன்கு சலித்த வயல் மண், 20 சதம் நன்கு மக்கிய பொடியான தொழு உரம் அல்லது மண்புழு உரம் அல்லது கம்போஸ்ட் உரம், 10 சதம் நெல் உமி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் 1.5 கிலோ பொடி செய்யப்பட்ட டி.ஏ.பி உரத்தினை கலந்து கொண்டு மரசட்டத்தில் நிரப்ப வேண்டும். இதன்மேல் நன்கு முளை கட்டிய் விதைகளை ஒரு சதுர மீட்டருக்கு 100 கிராம் வீதம் சீராக தூவி பின்னர் உலர்ந்த மண்ணை கொண்டு மூடி பூவாளி கொண்டு முதல் ஐந்து நாட்கள் வரை ஒரு நாளிற்கு இரண்டு முதல் மூன்று முறை நீர் தெளித்து விடவேண்டும். பின்னர் பாய் நாற்றாங்காலை சுற்றியுள்ள வாய்கால்மூலம் 1-2 செ.மீ உயரத்திற்கு நீர் நிறுத்தி 10 முதல் 20 நாட்கள் வரை பராமரித்து நடவு செய்ய வேண்டும்.

கன மழை அல்லது கூடுதல் வெப்பத்திலிருந்து நாற்றுகளை பாதுகாக்க தென்னங்கீற்று அல்லது வைக்கோல் கொண்டு மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு மூடாக்கு போட்டு பின்னர் எடுத்துவிடவேண்டும். நாற்றின் வளர்ச்சி குறைவாக இருந்தால் 0.5 சதம் யூரியாவுடன் 0.5 சதம் ஜிங் சல்பேட் கரைசலை விதைத்த 8 முதல் 10 நாட்களில் பாய் நாற்றில் தெளிக்க வேண்டும்.

கேள்வி பதில்கள்

1. நடவு செய்வதற்கு முன்னர், களர் நிலங்களை எவ்வாறு மேலாண்மை செய்வது?

8.5 அளவிற்கும் மேல் கார அமில நிலையுள்ள களர் நில மண்ணுக்கு, உகந்த ஈரப்பத அளவில் உழவு செய்து, ஜிப்சத்தை 50 சதவிகிதம் ஜிப்சம் தேவையில் சீராக அளித்து, நீரைத் தேக்கி வைத்தல் வேண்டும். பின்பு கரையும் உப்புக்கள் அரித்துச் செல்வதைத் தடுப்பதற்கு வடிகால் அமைக்க வேண்டும். நடவு செய்வதற்கு 10-15 நாட்களுக்கு முன்னர் பசுந்தழை எரு 5 டன்/எக்டர் அளிக்க வேண்டும். தொடர்ந்து, ஒரு எக்டருக்கு 37.5 கிலோ துத்தநாகக் கந்தகையை மணலுடன் கலந்து மொத்த அளவு 75 கிலோவாக மாற்றி சமப்படுத்தப்பட்ட வயலில் சீராக அளிக்க வேண்டும். மண்ணுக்குள் இதனை அளிக்கக் கூடாது. இம்முறையின் மூலம், கலர் நிள மண்ணில் உள்ள நெற்பயிர்களைப் பாதுகாக்க முடிகிறது.

2. நடவு செய்வதற்கு முன்னர் மண்ணிலுள்ள உப்புத்தன்மை பிரச்சினையை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

உவர்ப்பு மண்ணில்,மின் கடத்தும் திறன் (EC) மதிப்பு 4 dS/m அளவிற்கும் மேல் காணப்பட்டால், பக்கவாட்டு மற்றும் முதன்மை வடிகால் வாய்க்கால்களை அமைக்க வேண்டும். (60 செ.மீ ஆழம் மற்றும் 45 செ.மீ அகலம்). பசுந்தழை உரங்களை பயிர் நடவு செய்வதற்கு 10-15 நாட்கள் முன்னர் (5 டன்/எக்டர்) அளவில் அளித்து, பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரத்துடன் 2 சதவிகிதம் கூடுதலான தழைச்சத்து உரம் அளிக்க வேண்டும். மேலும் நடவின் போது துத்தநாக சல்பேட் 37.5 கிலோ/எக்டர் அளிக்க வேண்டும்.

3. நாற்றுக்களின் வயது என்ன?

நடவு செய்யப்படும் நாற்றுக்கள், ஒற்றை நாற்று முறைக்கு 15 நாட்களானதாக இருக்க வேண்டும்.

4. பயிர் இடைவெளி என்ன?

சதுர நடவாக 22.5 x 22.5 செ.மீ (9 x 9 அங்குலம்)

ஆதாரம்: வேளாண்மைத்துறை, திருச்சி