மக்காச்சோளம் பருவம் மற்றும் இரகங்கள் பருவம் இரகங்கள் ஆடிப்பட்டம் (ஜூலை - ஆகஸ்ட்) த.வே.ப.க மாக்காச்சோள கலப்பின கோ 6, இளஞ்சோள இரகம் கோ(பிசி) 1 புரட்டாசிப்பட்டம் (செப்டம்பர் - அக்டோபர்) த.வே.ப.க மாக்காச்சோள கலப்பின கோ 6, இளஞ்சோள இரகம் கோ(பிசி) 1 தைப்பட்டம் (ஜனவரி - பிப்ரவரி) த.வே.ப.க மாக்காச்சோள கலப்பின கோ 6, இளஞ்சோள இரகம் கோ(பிசி) 1 1. தொழு உரம் இடுதல் ஒரு எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தொழு உரம் அல்லது மக்கிய தேங்காய் நாரைச் சமமாகக் கடைசி உழவிற்கு முன் சீராக இட்டு, அதனுடன் 10 பாக்கெட் (2000 கிராம் எக்டர்) அசோஸ்பைரில்லம் கலந்து பரப்பி நன்கு உழவு செய்யவும். 2. நிலம் தயாரித்தல் முதலில் நிலத்தை டிராக்டர் மூலம் கட்டி கலப்பையால் ஒரு முறை உழவு செய்யவும். பின்பு தொழு உரத்தை நிலத்தில் பரப்பிய பிறகு கொக்கி கலப்பை கொண்டு இரு முறையும் நன்கு உழவு செய்யவும். 3. பார் பிடித்தல் 60 செ.மீ இடைவெளியில் 6 மீ நீளம் கொண்டு பார் அமைக்கவும், பார்களுக்கு குறுக்கே பாசன வாய்க்கால் அமைக்கவும். பார் அமைக்காவிட்டடால், 10 அல்லது 20 சதுர மீட்டர் அளவில் நீர்வசதிக்கேற்ப பாத்திகள் அமைக்கலாம். செலவினை குறைக்க டிராக்டர் மூலம் பார் அமைக்கும் கருவிகளை பயன்படுத்தவும். 4. உரமிடுதல் மண் பரிசோதனைக்கு ஏற்ப தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடுதல் வேண்டும். இல்லையெனில் பொதுப் பரிந்துரையான 1350, 62.50, 50 கிலோ எக்டர் அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களைப் பொதுவாக அளிக்கவேண்டும். அடியுரமாக கால் பகுதி தழைச்சத்து, முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்து விதைப்பதற்கு முன் இடவும். பார்களில் கீழிலிருந்து 2/3 பகுதிக்கு 6 செ.மீ ஆழத்திற்கு குழியெடுத்து உரங்களை போட்டு 4 செ.மீ வரை மண் கொண்டு மூடவும். பாத்திகளில் 6 செ.மீ ஆழத்திற்கும், 60 செ.மீ இடைவெளி விட்டும் குழியெடுத்து உரக்கலவையை இட்டு 4 செ.மீ வரை மண்கொண்டு மூடவும். உரக்கலவையை பார்களின் ஓரத்தில் இடவேண்டும். 4 செ.மீ ஆழத்திற்கு மண்ணால் மூடவேண்டும். அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் உரத்தைப் பயன்படுத்தினால் 100 கிலோ தழைச்சத்து மட்டும் அளித்தால் போதும். 5. நுண்ணூட்டச் சத்து இடுதல் தமிழ்நாடு வேளாண் துறை உருவாக்கிய நுண்உரக் கலவையை 12.5 கிலோ மணலுடன் கலந்து மொத்த அளவு 50 கி / ஹெக்டர் அளிக்க வேண்டும். எக்டருக்கு 30 கிலோ தமிழ்நாடு நுண்ணூட்டக் கலவையை ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்க வேண்டும். (ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண்ணூட்டக்கலவை மற்றும் தொழுவுரத்தை கலக்க வேண்டும். தகுந்த ஈரப்பதத்தில் கலந்து ஒரு மாதம் நிழலில் வைக்க வேண்டும்). (அல்லது) 5 கிலோ துத்தநாகம் + 40 கிலோ கந்தகம் + 1.5 கிலோ போரானை பற்றாக்குறை உள்ள மண்ணில் இட வேண்டும். துத்தநாக பற்றாக்குறை உள்ள மணலில் கலப்பின மக்காச்சோளத்திற்கு ஏக்கருக்கு 37.5 கி துத்தநாக சல்பேட் பரிந்துரைக்கப்படுகிறது. பார் முறை நடவில், கலவையை மூன்றில் இரண்டு பங்கு வரப்பு மேலயும், வாய்க்காலிலும் தூவ வேண்டும். பாத்தி முறை பின்பற்றும்பொழுது, குழித்து நுண்ணூட்டக் கலவையை இட வேண்டும். நுண்ணூட்டக் கலவையை மண்ணில் இணைக்க வேண்டாம். 6. விதையளவு நல்ல தரமான விதைகளை தேர்வு செய்ய வேண்டும் மற்றும் விதை வீதம் எக்டருக்கு 20 கிலோ - கோ.1 மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கலப்பின மக்காச்சோளம் கோ 6 மற்றும் எக்டருக்கு 25 கிலோ - கோ (பிசி)1. 7. இடைவெளி ஒரு செடிக்கும் மற்றோர் செடிக்கும் இடையே 25 செ.மீ இடைவெளியும், பாருக்கு பார் 60 செ.மீ இடைவெளியும் இருக்கவேண்டும். செடிகளின் எண்ணிக்கை இரகம் மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள் 6-7 செடிகள் சதுரமீட்டர் சிறுமக்காச்சோளம் 8-9 செடிகள் / சதுரமீட்டர். 8. விதை நேர்த்தி தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த ஒரு கிலொ விதையை குளோர்பைரிபாஸ் 20 ஈசி அல்லது மோனோகுரோட்டாபாஸ் 36 டபிள்யூ எஸ்சி அல்லது பாசோலோன் 35 ஈசி (4 மிலி + 0.5 கிராம் கோந்து + 20 மிலி தண்ணீர்) அல்லது இமிடாகுளோபிரிட் 10 கிராம் / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும். அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த மெட்டாலாக்ஸில் அல்லது திரம் 2 கிராம் / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும். பூஞ்சாண விதை நேர்த்தி செய்த விதைகளை விதைப்பதற்கு முன் மூன்று பாக்கெட் அசோஸ்பைரில்லம் (600 கிராம், எக்டர்) கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். 9. விதைத்தல் அடியுரம் இடப்பட்ட வரிசையில் நான்கு செ.மீ ஆழத்தில் விதைத்து மண்ணால் மூட வேண்டும். சரியான முளைப்புத் திறன் இருக்குமெனில் குழிக்கு ஒரு விதை போதுமானது அல்லது குழிக்கு 2 விதை இடவேண்டும். 10. களைக் கட்டுப்பாடு விதைத்த 3-5ம் நாள் களை முளைக்கும் முன் களைக்கொல்லியான எக்டருக்கு 0.25 கிலோ அட்ராஜினை நேப்செக் /ராக்கர் தெளிப்பானில் தட்டையான விசிறி நுண் குழாய் பொருத்தி 500 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். தொடர்ந்து விதைத்த 30-35-ம் நாளில் கைக்களை எடுக்க வேண்டும். (அல்லது) ஏக்கருக்கு 0.25 கி அட்ராஜின் விதைத்த 3-5ம் நாளில் களை முளைக்கும் முன் களைக்கொல்லியை தெளிக்க வேண்டும். தொடர்ந்து ஏக்கருக்கு 2,4-D 1 கிலோ விதைத்த 20-25ம் நாளில் நேப்செக் /ராக்கர் தெளிப்பானில் தட்டையான விசிறி நுண் குழாய் பொருத்தி 500 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். (அல்லது) வரிசை முறை விதைப்பில், விதைத்த 3-5ம் நாளில் களை முளைப்பதற்கு முன் அட்ராஜின் எக்டருக்கு 0.25கி தெளிக்க வேண்டும். தொடர்ந்து இரட்டை சக்கர களையெடுக்கும் கருவியைக் கொண்டு விதைத்த 30-35ம் நாளில் களையெடுக்க வேண்டும். மண்ணில் போதுமான ஈரப்பதம் இருக்கும்பொழுது களைக்கொல்லியை பயன்படுத்தவும். களைக்கொல்லியை உபயோகித்த பின்னர் மணலை எதுவும் செய்யக் கூடாது. ஊடுபயிராக பருப்பு வகைகள் இருந்தால் அட்ராஜின் உபயோகிக்கக் கூடாது. பென்டிமெத்தலின் ஏக்கருக்கு 0.75 கிலோ விதைத்த 3-5ம் நாளில் களை முளைக்கும் முன் தெளிக்கவும். 11. பயிர் எண்ணிக்கை பராமரித்தல் இரண்டு விதைகள் விதைத்து இருந்தால், 12-15வது நாளில் நன்கு வீரியமாக வளர்ந்த ஒரு செடியை ஒரு குழிக்கு வைத்து மற்றதை களையவேண்டும். விதை முளைக்காமல் உள்ள இடத்தில், தண்ணீரில் ஊறவைத்த விதைகளை குழிக்கு இரண்டு விதை வீதம் விதைத்து உடன் நீர்ப் பாய்ச்சவேண்டும். 12. களை எடுத்தல் விதைத்த 30வது நாளில் களைக்கொத்து கொண்டு களை எடுக்கவும். பின்னர் மண் அணைத்து பார்களை சரிசெய்யவேண்டும். இதனால் செடிகள் சாயாத தன்மை பெறும். 13. தழைச்சத்து மேலுரம் இடுதல் விதைத்த 25வது நாளில், தழைச்சத்தில் பாதி அளவு உரத்தை இட்டு மண்ணால் மூடவேண்டும். மீதம் உள்ள கால் பகுதி தழைச்சத்தை விதைத்த 45வது நாளில் இடவேண்டும். 14. நீர் நிர்வாகம் மக்காச்சோள பயிர் அதிக வறட்சியும் அதிக நீரையும் தாங்காது. அதனால் பயிரின் தேவைக்கேற்ப நீர்ப்பாய்ச்சுதல் அவசியம். பயிரின் முக்கியப் பருவங்களில் (45-65 நாட்கள்) போதுமான நீர் பாய்ச்சுவதால் அதிக மகசூல் பெறலாம். 15. அறுவடை அறுவடை பருவம் பயிரின் வயதைக் கொண்டு கீழ்க்கண்ட அறிகுறிகளை காணவும். கதிரின் மேல் தோல் பழுத்து முதிர்ந்தவுடன் காய்ந்துவிடும். விதைகள் கடினமாகவும் காய்ந்தும் காணப்படும். இப்பருவம் அறுவடைக்கேற்றது பயிர் அறுவடை கோணி ஊசியைக் கொண்டு கதிரின் மேல் தோலைக் கிழித்து கதிர்களை பிரித்து எடுக்கவும். அறுவடையை ஒரே நேரத்தில் முடிக்கவும். கதிரடித்தல் கதிர்களை சூரிய வெளிச்சத்தில் நன்கு காய வைக்கவும். விசைக் கதிரடிப்பான் கொண்டோ அல்லது டிராக்டரை கதிர்களின் மேலே ஓட்டியோ மணிகளைப் பிரித்தெடுக்கலாம். மணிகளைத் தூற்றி சுத்தப்படுத்தவும். பின்பு இவற்றை கோணிப்பையில் சேமிக்கவும். சோளம் சோளத்தின் வளர்ச்சி நிலைகள் நாற்று பருவம்:1-15 நாட்கள் தழைப் பருவம் (முழுவளர்ச்சி (30-40):16-40 நாட்கள் பூத்தல்/இனப் பெருக்க நிலை:41-65 நாட்கள் முதிர்வு பருவம்:66-95 நாட்கள் பழ முதிர்ச்சி பருவம்:96-105 நாட்கள் விதை தேர்வு நல்ல தரமான விதைகளை நோய் மற்றும் பூச்சி தாக்காத வயல்களிலிருந்து தேர்வு செய்யவும். விதை அளவு பாசனபயிர் நடவு - 7.5 கிலோ/எக்டர்; நேரடி விதைப்பு - 10 கிலோ/எக்டர் மானாவாரி நேரடி விதைப்பு - 15 கிலோ/எக்டர் பாசன நிலையில் சோளத்தை நடவு முறை மற்றும் நேரடி விதைப்பு மூலமாகவும் பயிர் செய்யலாம். நடவு பயிர் பின்வரும் நன்மைகளைக் கொண்டுள்ளது. நடவு வயலில் கால அளவு 10 நாட்கள் குறைகிறது. நேரடியாக நடவு செய்த பயிர்களை தண்டு ஈ முதல் மூன்று வாரங்களில் தாக்குகிறது. இவற்றை கட்டுப்படுத்துவது கடினம். இவை நாற்றங்காலிலேயே திறம்பட கட்டுப்படுத்தப்படுகின்றன. நாற்றுகளில் வெளிறிய மற்றும் அடிச்சாம்பல் நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவை நீக்கப்படுகிறது. எனவே அடிச்சாம்பல் நோய் நிகழ்வு நடவு வயலில் குறைகிறது. நடவிற்கு ஆரோக்கியமான நாற்றுகளை பயன்படுத்துவதால் எல்லா பயிர்களும் நன்றாக வளர்கின்றன. எக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் விதை வீதம் குறைகிறது. உரங்களின் பயன்பாடு நடவு பயிர் மண் பரிசோதனை பரிந்துரைப்படி தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து இட வேண்டும். மண் பரிசோதனை பரிந்துரைகள் இல்லையென்றால் பொதுப்பரிந்துரையாக எக்டருக்கு 90 கிலோ தழைச்சத்து, 45 கிலோ மணிச்சத்து, மற்றும் 45 கிலோ சாம்பல் சத்து என்ற அளவில் இட வேண்டும் மற்றும் முழு அளவு மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து நடுவதற்கு முன் அளிக்க வேண்டும். விதைத்த 0, 15 மற்றும் 30-ம் நாளில் நைட்ரஜன் 50:25:25 % அளிக்கவும் மற்றும் முழு அளவு மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து நடுவதற்கு முன் அளிக்க வேண்டும். வரப்புப் பயிரில் 5 செமீ ஆழத்தில் வரப்பின் ஓரத்தில் பள்ளம் தோண்டி குழித்து உரக் கலவையை இட்டு 2 செ.மீ அளவுக்கு மண் கொண்டு மூட வேண்டும். நடவு வயலில் 10 பாக்கெட் (2 கிலோ/ எக்டர்) அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பாக்கெட் (2000 கிராம்/ எக்டர்) பாஸ்போ பாக்டீரியா அல்லது 20 பாக்கெட் (4000 கிராம்/ எக்டர்) அசோபோஸை 25 கிலோ தொழுவுரம் + 25 கிலோ மணலுடன் கலந்து விதைத்தல் / நடவிற்கு முன் இட வேண்டும். நேரடி விதைப்பு பயிர் மண் பரிசோதனை பரிந்துரைப்படி தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து இட வேண்டும். மண் பரிசோதனை பரிந்துரைகள் இல்லையென்றால் பொதுப்பரிந்துரையாக எக்டருக்கு 90 கிலோ தழைச்சத்து, 45 கிலோ மணிச்சத்து, மற்றும் 45 கிலோ சாம்பல் சத்து என்ற அளவில் இட வேண்டும் மற்றும் முழு அளவு மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து நடுவதற்கு முன் அளிக்க வேண்டும். விதைத்த 0, 15 மற்றும் 30-ம் நாளில் நைட்ரஜன் 50:25:25 % அளிக்கவும் மற்றும் அடிஉரமிடல் சாத்தியமில்லை என்றால் 24 மணி நேரத்திற்குள் மணலின் மேல் அளிக்க வேண்டும். படுக்கை முறை நடவில் விதைப்பதற்கு முன் வரப்பிலிருந்து 45 செ.மீ இடைவெளி விட்டு 5 செ.மீ ஆழத்திற்கு குழி எடுக்க வேண்டும். உரக் கலவையை 5 செ.மீ குழியில் வைத்து 2 செ.மீ அளவிற்கு மண் கொண்டு மூட வேண்டும். சோளத்திற்கு கலப்புப் பயிராக பயறுவகை பயிர் இருந்தால் (உளுந்து, பாசிப்பயறு மற்றும் தட்டைப் பயறு) 30 செ.மீ இடைவெளி விட்டு 5 செ.மீ ஆழத்திற்கு குழி எடுக்கவும். உரக் கலவையை சோளத்தின் இரண்டு வரிசைகளில் வைத்து 2 செ.மீ மணல் கொண்டு மூட வேண்டும். பயறுவகை பயிர் வளர்ந்த மூன்றாவது வரிசையை தவிர்க்கவும் மற்றும் உரக் கலவையை அடுத்த இரண்டு வரிசைகளில் வைத்து 2 செ.மீ மணல் கொண்டு மூட வேண்டும். உயிர் உர பயன்பாடு : பாசன சோளத்தில் அசோஸ்பைரில்லம் அளித்திருந்தால் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தில் 75% போதுமானது. மண் பரிசோதனை அடிப்படையிலான உர பரிந்துரை மேற்கு மற்றும் வட மேற்கு மண்டலம் அதாவது அல்பிசால், இன்செப்டிசால் மற்றும் வெர்டிசால் போன்றவை குறிப்பிட்ட உற்பத்தி இலக்குகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. பயிர் அறுவடை அறுவடைக்கான அறிகுறிகள் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றத்தத் தரும். தானியங்கள் கடினமாகும். அறுவடை கதிர்களை தனியாக அறுவடை செய்யவும். தட்டை ஒரு வாரம் கழித்து வெட்டி நன்கு காயவைத்தபின் சேமித்து வைக்கவும். தானியங்களை கதிரில் இருந்து பிரித்தல் மற்றும் தரம் பிரித்தல் கதிர்களை காயவைக்கவும். விசைக் கதிரடிப்பான் கொண்டு விதைகளைப் பிரிக்கலாம் அல்லது கதிர்களைப் பரப்பி கல் உருளை அல்லது மாடுகளை செலுத்துவதன் மூலமும் பிரிக்கலாம். ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்