புறக்கணிக்கப்பட்ட புஞ்சைத் தானியங்கள் இன்றைக்குப் புதியதொரு சந்தையைப் பெற்று வருகின்றன. நார் ஊட்டம் குறைவாக உள்ள உணவால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்பதும் நீரிழிவு போன்ற நோய்களுக்குத் தீட்டிய வெள்ளை அரிசியே காரணம் என்பதும் நவீன மருத்துவ உலகம் கூறும் முடிவுகள். இதற்கு மாற்றாக இருப்பவை தினை, சாமை, வரகு போன்ற புஞ்சைத் தானியங்கள். எனவே, நகர்ப்புற மேட்டுக்குடி மக்களுக்கான உணவாக இது மெல்ல மெல்ல மாறி வருகிறது.

ஒரு காலத்தில் உடல் உழைப்பாளிகளின் உணவாக இருந்து மேட்டுக்குடிகளால் புறக்கணிக்கப்பட்ட இவை, இன்றைக்கு உடல் உழைப்பாளிகளால் மறக்கப்பட்டு, மேட்டுக்குடிகளின் 'ரெசிபி'யாக மாறிவருவது, ஒரு வரலாற்று முரண்! எளிய மக்களுக்கும் கிடைக்கும் உணவாக இவற்றை மாற்றினால், உண்மையான பயன் கிடைக்கும்.

பற்றாக்குறை காலப் பயிர்

பொதுவாக குதிரைவாலி பயிரானது வறட்சி, மண் உவர்ப்பு ஆகியவற்றைத் தாங்கி வளரக்கூடிய மானாவாரி சிறுதானியப் பயிராகும்.

குதிரைவாலி பயிரிட ஒரு ஏக்கருக்கு மூன்று முதல் நான்கு கிலோ விதை போதும். கோடையில் நிலத்தை 2 முறை கலப்பையை கொண்டு உழுது பக்குவப்படுத்தி, தொழுவுரமோ அல்லது ஆட்டுக்கிடையோ போட்டு நிலத்தை ஊட்டமேற்றி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு மழை பெய்தவுடன் சரியான ஈரத்தில் உழும்போதே, விதைத்துவிட வேண்டும். தேவைப்பட்டால் களை எடுத்துக்கொள்ளலாம். பலர் களைகூட எடுப்பது கிடையாது. களையை மீறி வளரும் திறன் கொண்டது குதிரைவாலி.

ஈரம் இருந்தால் ஒருமுறை அமுதக் கரைசல் என்ற ஊட்டக் கரைசலைத் தெளிக்கலாம். மழை குறைவாக இருந்தால் விளைச்சல் 500 கிலோவும், போதிய அளவு இருந்தால் 700 கிலோவும் கிடைக்கும். கதிர்கள் நன்கு காய்ந்து முற்றிய பிறகு அறுவடை செய்ய வேண்டும். தானியங்களை பிரித்த பின் உள்ள தட்டையையும் நன்கு உலர்த்தி சேமித்து வைத்தால் ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுக்கலாம்.

காவிரி வடிகால் உழவர்கள் நெல்லுக்குப் பின்னர் ஒரு முறை தண்ணீர்ப் பற்றாக்குறை வரும் காலத்தில், குதிரைவாலி போன்ற அருந்தானியங்களை பயிர் செய்தால் நிச்சயம் அவர்களுக்கு நன்மை கிடைக்கும்.

ஆதாரம்: தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை