அடியுரமாக அங்கக உரங்கள் இடுதல்

தோட்டக்கால் நிலங்களில் கடைசி உழவிற்கு முன்னதாக தொழுஉரம் 12.5 டன்/ எக்(ஆழ் குப்பை உரம் 25 டன்/ எக்(அ) ஆலை அழுக்கு 37.5 டன்/ எக் என்ற அளவில் இட வேண்டும். களி மண் நிலங்களில் மேற்கண்ட அங்கக உரங்களை நடவு சால்களில் இட்டு நன்கு கலந்து விடவேண்டும்.

அடியுரமாக இரசாயன உரங்கள் இடுதல்

மண் பரிசோதனை செய்யப்படவில்லையெனில் பொதுப்பரிந்துரையாக தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து முறையே எக்டருக்கு 300:100:200 கிகி அளிக்க வேண்டும்.

சூப்பர் பாஸ்பேட் (625 கிகி/எக்டர்) மண்வெட்டி கொண்டு அளிக்க வேண்டும்.

துத்தநாக சத்து மற்றும் இரும்புச்சத்துக் குறைபாடு உள்ள வயல்களில் முறையே 37.5 கிலோ/எக் துத்தநாக சல்பேட் மற்றும் 100 கிலோ/எக் பெரஸ் சல்பேட் இடுதல் வேண்டும்.

கந்தக பற்றாக்குறையுள்ள மணலில் ஜிப்சம் வடிவில் கந்தகத்தை எக்டருக்கு 500 கிகி அளிப்பதன் மூலம் கரும்பு விளைச்சல் மற்றும் சாறின் தரத்தை உயர்த்தலாம்.

மேலுரமிடுதல்

மண்ணில் இடுதல்

தண்ணீர் பற்றாக்குறை இல்லாத இடங்களில் 275 கிலோ தழைச்சத்து மற்றும் 112.5 கிலோ சாம்பல் சத்து/ எக் என்ற அளவில் மூன்று சம பாகங்களாகப் பிரித்து கரும்பு நடவு செய்த 30, 60 மற்றும் 90ம் நாள் இடுதல் வேண்டும்.

கிணற்றுப் பாசனமுடைய பகுதிகளில் 225 கிலோ தழைச்சத்து மற்றும் 112.5 கிலோ சாம்பல் சத்து/ எக் என்ற அளவில் மூன்று சம பாகங்களாகப் பிரித்து கரும்பு நடவு செய்த 30, 60 மற்றும் 90ம் நாள் இடுதல் வேண்டும்.

தழைச்சத்து சேமிப்பு

வேப்பம்புண்ணாக்கு கலந்த யூரியா

67.5 கிலோ தழைச்சத்து/ எக் ரூ.27.5 கிலோ வேப்பம்புண்ணாக்கினை நடவு செய்த 30, 60 மற்றும் 90 நாட்களில் இட வேண்டும்.

குறிப்பு: வேப்பம்புண்ணாக்கு கலத்தல் தேவையான அளவு வேப்பம்புண்ணாக்கினைப் பொடி செய்து அதனை யூரியா உரத்துடன் நன்கு கலந்து 24 மணி நேரத்திற்கு வைத்து பின்னர் உபயோகிக்கலாம். இதன் மூலம் 75 கி தழைச்சத்து/எக் மிச்சமாகிறது.

அசோஸ்பைரில்லம்

12 பொட்டலம் (2400 கிராம்/ எக்) அசோஸ்பைரில்லம் அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நுண்ணுயிர் கலவை எண் 1 உடன் 25 கிலோ தொழு உரம் மற்றும் 25 கிலோ மண் கலந்து நடவு செய்த 30வது நாள் கரும்புப் பயிர் குத்துக்களுக்கு அருகே இட வேண்டும். இதே போல் கரும்பு நட்ட 60வது மற்றும் 90வது நாட்களில் இதே அளவில் இடுதல் வேண்டும். (கிணற்று நீர்ப்பாசனமுடைய இடங்களுக்கு)

தொடராக இடுதல்

கரும்புப் பயிர் வரிசைக்கு பக்கவாட்டில் களைக் கொத்தி கொண்டு சுமார் 5 செ.மீ. ஆழசால் அமைத்து அதில் உரங்களை தொடராக இட்டு பின்னர் மண் கொண்டு மூட வேண்டும்.

ஆழ்துளை முறையில் இடுதல்

255 கிலோ தழைச்சத்தினை யூரியா மற்றும் பொட்டாஷ் சேர்த்து 15 செ.மீ. ஆழத்தில் கரும்புப் பயிரின் ஒவ்வொரு குத்துக்கு அருகே 20 கிலோ தழைச்சத்தினை இடுவதன் மூலம் கரும்பின் மகசூல் பாதிக்காத வகையில் சேமிக்கலாம்.

நுண்ணூட்டச்சத்து உரங்கள்

துத்தநாக பற்றாக்குறையுள்ள மண்: அடியுரமாக எக்டருக்கு 37.5 கிலோ துத்தநாக சல்பேட்அளிக்கவும்.

கரும்பில் துத்தநாக பற்றாக்குறை அறிகுறிகள்: இலைத் தெளிப்பாக0.5% துத்தநாக சல்பேட்டை 1% யூரியாவுடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் பற்றாக்குறை மறையும் வரை தெளிக்க வேண்டும்.

இரும்பு பற்றாக்குறையுள்ள மண்: அடியுரமாக எக்டருக்கு 100 கிலோ ஃபொரோஸ் சலடபேட் அளிக்கவும்.

கரும்பில் இரும்பு பற்றாக்குறை அறிகுறிகள்: இலைத் தெளிப்பாக 1% ஃபொரோஸ் சல்பேட்டை1% யூரியாவுடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் பற்றாக்குறை மறையும் வரை தெளிக்க வேண்டும்.

தாமிர பற்றாக்குறையுள்ள மண்ணில் தாமிர சல்பேட்டை எக்டருக்கு 5 கிலோ மண் வழியாக அளிக்க வேண்டும். மாற்றாக இலைத் தெளிப்பாக 0.2% தாமிர சல்பேட்டை இரண்டு முறை பயிர் வளர்ச்சியின் ஆரம்பத்தில் அளிக்க வேண்டும்.

பொதுவான நுண்ணூட்டச்சத்து கலவை: கரும்பிற்கு எக்டருக்கு 50 கிலோ நுண்ணூட்டச்சத்துக் கலவையை அளிக்க வேண்டும். நுண்ணூட்டச்சத்துக் கலவை 20 கிலோ ஃபெரோஸ் சல்பேட், 10 கிலோ மாங்கனீசு சல்பேட், 10 கிலோ துத்தநாக சல்பேட், 100 கிலோ மக்கிய தொழுவுரத்துடன் கலந்த 5 கிலோ போராக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை நடவிற்கு முன்னர் மண்ணில் அளிக்க பரிந்துரைக்கப்படுகிறது. (அல்லது) கரும்பின் மகசூலை அதிகரிக்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நுண்ணூட்டக் கலவையை எக்டருக்கு 50 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கலாம்.

நுண்ணூட்டச்சத்து மற்றும் பேரூட்டச்சத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவு

பேரூட்டச்சத்து

கரும்பு – நடவு பயிர் (சர்க்கரை ஆலைக்காக உற்பத்தி செய்யப்படும் கரும்பு) எக்டருக்கு 300:100:200 கிலோ தழைச்சத்து , மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து இட வேண்டும்.

கரும்பு – மறுதாம்பு பயிர் (சர்க்கரை ஆலைக்காக உற்பத்தி செய்யப்படும் கரும்பு) எக்டருக்கு 300 + 25% அதிக தழைச்சத்து : 100 : 200 கிலோ மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து இட வேண்டும்.

வெல்லத்திற்காக உற்பத்தி செய்யப்படும் கரும்பு (நடவு மற்றும் மறுதாம்பு பயிர்) எக்டருக்கு 225 : 62.5 : 112.5 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து இட வேண்டும்.

கரும்பிற்கான உயிர் உரம்

அசோஸ்பைரில்லம் என்பது கரும்பு வேர்களுக்கு ஊட்டமளிக்கும் பொதுவான தழைச்சத்தாகும் மற்றும் வருடத்திற்கு ஒரு ஏக்கருக்கு 50 முதல் 75 கிலோ வளிமண்டல தழைச்சத்தை நிவர்த்தி செய்கிறது. தற்சமயம் பயிரில் வாழும் பாக்டீரியம் (குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ்) கரும்பில் அசோஸ்பைரில்லமை விட அதிகமாக தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது. இவை கரும்பு பயிர் முழுவதிற்கும் தழைச்சத்தை எடுத்துச் செல்கிறது மற்றும் தழைச்சத்தின் அளவை அதிகரிக்கிறது. மண்ணில் பாஸ்பேட், இரும்பு மற்றும் துத்தநாக சத்தை வேர் வரை கொண்டு செல்கிறது. இது பயிர் வளர்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் கரும்பின் மகசூலையும் சாறில் இனிப்புத் தன்மையையும் அதிகரிக்கிறது. இது அசோஸ்பைரில்லத்தைவிட அதிக செயல்திறன் வாய்ந்தது. த.வே.ப.கழக பயோபெர்ட் -1 பாஸ்போபாக்டீரியாவை பாஸ்பரஸ் கரைப்பானாக கரும்பு பயிருக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ் கொண்டு கரணை நேர்த்தி செய்தல்

கரணைகளை நடுவதற்கு முன் எக்டருக்கு 10 பாக்கெட் (2 கிலோ) குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸை 250 லிட்டர் தண்ணீரில் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும்.

குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ்கொண்டுஅடியுரமிடுதல்

எக்டருக்கு 12 பாக்கெட் (2.4 கிலோ) விதைத்த 30, 50 மற்றும் 90-ம் நாள் நீர்ப்பாய்ச்சிய நிலையில் அடியுரமாக அளிக்க வேண்டும்.

அதே முறையில் பாஸ்போ பாக்டீரியா அளித்தல்

அடியுரம் இடாவிட்டால் அதே முறையில் விதைத்த 30, 50 மற்றும் 90-ம் நாள் நீர்ப்பாய்ச்சிய நிலையில் அடியுரமாக அளிக்க வேண்டும்.

நுண்ணுயிர் நேர்த்தி நடவிற்கு சற்று முன்பு அளிக்க வேண்டும். நுண்ணுயிர் உரம் அளித்தவுடன் நடவு செய்து நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

நுண்ணுயிர் உரத்தை இரசாயன உரத்துடன் கலக்க வேண்டாம்.

பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தை 25% குறைப்பதன் மூலம் நுண்ணுயிர் உரம் அளித்ததன் பலனை அடையலாம்.

மறுதாம்புப் பயிர் நிர்வாகம்

25 சத அதிகப்படியான தழைச்சத்தினை கட்டைவிட்ட 5-7 நாட்களில் அளித்தல்

பயிர் இரும்புசத்து பற்றாக்குறையால் மஞ்சளாக மாறும் போது பெரஸ் சல்பேட்டை 2.5 கி/எக் என்ற அளவில் கட்டைவிட்ட 15ம் நாள் தெளித்தல் பயிர் மீண்டும் மஞ்சளாக இருந்தால்15 நாள் இடைவெளியில் திரும்பவும் தெளிக்க வேண்டும். கடைசி தெளிப்புடன் எக்டருக்கு 2.5 கிலோ யூரியாவையும் சேர்த்துக்கொள்ளலாம்

முதல் மேலுரத்தினை 25ம்நாளும், 2வது மேலுரத்தினை 45 முதல் 50 நாட்களுக்குள் இடுதல்

இறுதி மேலுரத்தினை 70-75 நாட்களுக்குள் இட வேண்டும்

விதை நாற்றங்கால்

50 கிலோ யூரியாவை மேலுரமாக விதை கரும்பு அறுவடைக்கு ஒரு மாதம் முன்னர் இடுதல் அவசியம்

கேள்வி பதில்

1. கரும்பு நாற்றங்காலில் இடவேண்டிய உர அளவு என்ன?

125 கி.கி யூரியா + 125 கி.கி மியூரேட் ஆப் பொட்டாஷ் உரத்தினை ஹெக்டருக்கு இடவேண்டும்.

2. கரும்பு பயிரிடுமுன் வயலில் அங்கக உரங்கள் எவ்வளவு இடலாம்?

தொழு உரம் 12.5 டன்/ஹெ அல்லது சாறு வடிகட்டிய கரும்புச் சக்கை 37.5 டன்/ஹெ என்ற அளவில் தோட்ட நிலங்களில் கடைசி உழவிற்கு முன்பு இடவேண்டும். நன்செய் நிலங்களில் இவற்றை பாத்திகளில் இட்டு நன்கு மண்ணுடன் கலக்கச் செய்ய வேண்டும். மண்ணிணைப் பரிசோதித்து அதற்கேற்ற அளவு பாஸ்பரஸ் உரங்களை இடலாம். அல்லது சூப்பர் பாஸ்பேட் (375 கி.கி/ஹெ) உரத்தினை பாத்திகளில் இட்டு மண்ணில் நன்கு கலக்கச் செய்யவும். 37.5 கி.கி ஜிங்க் சல்பேட் மற்றும் 100 கி.கி பெர்ரஸ் சல்பேட்/ஹெ உரங்களை இரும்புச் சத்து குறைவாக உள்ள மண் வகைகளில் இடலாம்.

3. குழி நடவு முறையில் நடும்போது என்ன உரமிடலாம்?

பரிந்துரைக்கப்பட்ட உர அளவு 275:62.5:112.5 கி.கி (தழை:மணி:சாம்பல்) நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ். இதில் பாஸ்பரஸ் முழுவதும் அடி உரமாகவும். யூரியா மற்றும் மியூரேட் ஆப் பொட்டாஸ் (வெள்ளை) உரங்கள் உரப்பாசனம் வழியே 14 சம பாகங்களாகப் பிரித்து நடவு செய்த 15 ஆம் நாளிலிருந்து 210 ம் நாள் வரை அளிப்பது சிறந்தது.

4. கரும்பிற்குத் தேவைப்படும் அதிகப்படியான ஊட்டச்சத்துத் தேவையை எவ்வாறு ஈடுகட்டுவது (அளிப்பது)?

பரிந்துரைக்கப்பட்ட அளவு உரத்தினை சரியான அளவில் சரியான நேரத்தில் அளிப்பதே போதுமானது.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்