ராணித் தேனீ

தேனீக் கூட்டத்தின் முறையான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் ராணித் தேனீ மிகவும் அவசியம். ராணித் தேனீ இழப்பு தேனீக் கூட்டத்தைப் பல வழிகளில் பாதிக்கும். ராணித் தேனீ இழப்பு தேனீக் கூட்டத்திற்கு ஈடு செய்யக் கூடிய இழப்பா அல்லது ஈடு செய்ய முடியாத இழப்பா என்பது இழப்பு ஏற்படும் பொழுது இருக்கும் கூட்டின் நிலையைப் பொறுத்து அமையும். இழப்பு நேரிடும் பொழுது புழு அடைகளில் முட்டை மற்றும் இளம் புழுக்கள் இருந்தால் தேனீக் கூட்டம் ஒரு புதிய ராணித் தேனீயை உருவாக்கி இழப்பை ஓரளவிற்கு ஈடு கட்டி விடும். ஆனால் இழப்பு ஏற்படும் பொழுது முட்டைகளோ, புழுக்களோ இல்லையெனில் தேனீக்களில் புதிய ராணித் தேனீயை உருவாக்க இயலாது. இத்தகைய தருணத்தில் ராணித்தேனீ இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகி விடும்

இழப்பு ஏற்படக் காரணங்கள்

தேனீப் பெட்டிகளை முறைப்படியும் கவனத்துடனும் ஆய்வு செய்யத் தவறும் பொழுது ராணித் தேனீ இழப்பு ஏற்படலாம்

கூட்டம் பிடிக்கும் பொழுது ராணித் தேனீ இழப்பு ஏற்படலாம்

தேனீப் பெட்டி ஆய்வின் பொழுது அடைச் சட்டங்களை எடுக்கும் பொழுதோ அல்லது திருப்பி வைக்கும் பொழுதோ இரு அடைகளுக்கு நடுவே சிக்கி உருள நேரிட்டு ராணித் தேனீ நசுங்கி இறக்கலாம்

புணர்ச்சிப் பறப்பிற்குச் சென்ற ராணித் தேனீ கூட்டிற்குத் திரும்பாமல் பறவைக்கு இரையாகலாம்

ராணித் தேனீ புணர்ச்சிக்குப் பின் கூடு மாறித் தவறான கூட்டிற்குள் நுழைய நேரிட்டால் நுழைந்த கூட்டிலுள்ள பணித் தேனீக்கள் புதிதாக வந்த ராணியைச் சூழ்ந்து கொன்றுவிடும்

பூச்சிக் கொல்லி மருந்தின் தாக்குதலுக்கு இலக்கான கூட்டங்களில் சில சமயம் ராணி இழப்பு ஏற்படும்

கூட்டினுள் காணப்படும் அறிகுறிகள்

பெட்டியைத் திறந்து பார்க்கும் பொழுது ராணியில்லாக் கூட்டத்திலிருந்து ஒரு வித சோக இரைச்சல் எழும்

தேனீக்கள் அடையில் இருந்து தங்கள் பணிகளைச் சரிவரக் கவனிக்காமல் அங்கும் இங்கும் அலையும்

புழு அடைகளில் முட்டைகள் இளம் புழுக்கள் இருக்காது

பணித் தேனீக்கள் சிறுத்து வயிற்று நுனி சற்று கருத்து விடும்

சோதனை

ராணித் தேனீயில்லாக் கூட்டத்திற்கு வேறு ஒரு தேனீக் கூட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட முட்டைகள் மற்றும் இளம் புழுக்கள் உள்ள ஒரு புழு அடையைக் கொடுக்க வேண்டும். ராணியற்ற கூட்டம் கொடுக்கப்பட்ட அடையில் மூன்று நாட்களுக்குள் புதிய ராணி அறைகளைக் கட்டும். சில நேரங்களில் ஒரு கூட்டில் புதிதாக வெளி வந்த ராணித் தேனீ புணராமல் இருக்கலாம். இத்தகைய தருணத்தில் இக்கூட்டில் ராணித் தேனீ ஏற்கனவே இருப்பதால் சோதனைக்காக் கொடுக்கப்பட்ட புழு அடையில் பணித் தேனீக்கள் ராணி அறைகள் கட்டாது. அடைகளில் முட்டைகள் மற்றும் புழுக்கள் ராணித் தேனீ இழப்பால் இல்லையா அல்லது புதிதாக வந்த ராணித் தேனீ இன்னும் புணரவில்லை என்பதால் இல்லையா எனத் தேனீ வளர்ப்பாளர்கள் இச்சோதனை மூலம் பகுத்து அறிந்து கொள்ளலாம்

இழப்பால் ஏற்படும் விளைவுகள்

புழு வளர்ப்பு மூன்று முதல் நான்கு வாரங்களுக்குத் தடைப்படும்

கூட்டத்தின் வலு படிப்படியாகக் குறையும்

பணித் தேனீக்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டு சுபாவத்திலும் பல மாற்றங்கள் தோன்றும்

இழப்பு நேரிடும் பொழுது புழு அடைகளில் முட்டைகள் மற்றும் இளம் புழுக்கள் இருந்தால் அவசரகால ராணி அறைகள் கட்டிப் புது ராணியை உருவாக்கத் தேனீக்கள் முயற்சி மேற்கொள்ளும்

சில பணித் தேனீக்களில் சினைப்பைகள் வளர்ச்சி பெற்று பணித் தேனீக்கள் முட்டையிடத் துவங்கும்

பணித் தேனீ இடும் முட்டைகளிலிருந்து ஆண் தேனீக்கள் மட்டுமே தோன்றும் என்பதால் கூட்டமே நாளடைவில் அழிந்து விடும்

அவசரகதியில் புதிய ராணியை உருவாக்கும் பொழுது வயதான ராணியாக வளர்க்க நேரிடும். இதனால் செயல்திறன் குறைவான ராணித் தேனீ உருவாகும் வாய்ப்பும் உள்ளது

சரி செய்வது எப்படி

ராணியில்லாக் கூட்டத்திற்கு மூடப்பட்ட ராணித் தேனீ வளர்ப்பு அறையோ அல்லது புதியதொரு ராணித் தேனீயோ கொடுக்கலாம்

புதிய ராணித் தேனீயைக் கூட்டம் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் பிறிதொரு ராணியுள்ள கூட்டத்துடன் ராணியற்ற கூட்டத்தை இணைத்து விட வேண்டும்

முட்டையிடும் பணித் தேனீக்கள்

பொதுவாக ராணித் தேனீ நன்கு செயலாற்றும் ஒரு தேனீக் கூட்டத்தில் முட்டையிடும் பணியை ராணித் தேனீ மட்டுமே மேற்கொள்ளும். ஏனெனில் ராணித் தேனீயின் தாடைச் சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படும் ஒரு வித வசியப் பொருள் பணித் தேனீக்களின் சினைப் பைகளின் வளர்ச்சியைப் பெரிதும் மட்டுப்படுத்துகின்றது. இதே போன்று ஒரு கூட்டத்தில் புழு வளர்ப்பு சீராக நடைபெறும் பொழுது புழுக்கள் வெளிப்படுத்தும் ஒரு வகைப் பொருளும் விடுகின்றது. ஒரு தேனீக் கூட்டத்தில் ராணித் தேனீ இழப்பும் ஏற்படும். தேனீக்களால் புதிய ராணித் தேனீயை உருவாக்க வாய்ப்பே இல்லாது போய்விடும். இத்தகைய கூட்டங்களில் பணித் தேனீயின் சினைப் பைகளின் வளர்ச்சியைத் தடை செய்யும் காரணிகள் நீக்கப்படுவதால் சில பணித் தேனீக்கள் சினைப்பைகள் வளர்ச்சி பெற்று முட்டையிடத் துவங்குகின்றன. பணித்தேனீக்கள் ஆண் தேனீக்களுடன் புணர இயலாது. இதனால் முட்டையிடும் பணித்தேனீக்களால் கருவுறாத ஆண் தேனீக்கள் மட்டுமே உற்பத்தியாகும். இதனால் நாளடைவில் கூட்டில் பணி முடக்கம் ஏற்பட்டு இறுதியில் தேனீக் கூட்டமே வலுக்குன்றி அழிவுறும் நிலை உருவாகும். ராணி இழப்பு ஏற்பட்ட ஒன்று முதல் இரண்டு வாரத்திற்குள் பணித் தேனீக்கள் முட்டையிட துவங்கும்.

அறிகுறிகள்

முட்டையிடும் பணித் தேனீக்கள் தங்களின் குட்டையான வயிற்றை அடை அறையினுள் நுழைத்து முட்டையிடுவதைச் சில நேரங்களில் பார்க்கலாம்.

ஓர் அடை அறையில் பல முட்டைகள் தாறுமாறாக இடப்பட்டு இருக்கும்

முட்டைகள் அறையின் உட்புறச் சுவரிலும் இடப்பட்டு இருக்கும்

சில அடை அறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட புழுக்கள் இருக்கும்

உருவில் சற்று சிறிய பணித் தேனீ வளர்ப்பு அறைகளில் ஆண் தேனீக்கள் உருவாகும். புழு வளர்ச்சி அடைந்த பின்னர் இத்தகைய அறைகள் குவிந்த மெழுகு மூடிகளால் மூடப்பட்டு இருக்கும்

இதனால் சிறிய உருவமுடைய பணித் தேனீ போன்று அளவுடைய ஆண் தேனீக்கள் உருவாகும்

தேனீக்கள் சுறுசுறுப்பாகப் பணி ஆற்றாது

தீர்வு முறைகள்

தேனீ வளர்ப்போர் ராணி இழப்பு நேரிட ஒரு தேனீக் கூட்டத்திற்கு உரிய நேரத்தில் புது ராணித் தேனீயோ அல்லது மூடப்பட்ட ராணித் தேனீ வளர்ப்பு அறையோ அல்லது தேவையின் அடிப்படையில் மற்றொரு தேனீக் கூட்டத்திலிருந்து புழு அடையோ உரிய நேரத்தில் எடுத்துத் தர வேண்டும்

தேனீக் கூட்டங்களை அவ்வப் பொழுது ஆய்வு செய்து ராணித் தேனீ கூட்டில் உள்ளதா? அதன் செயல்பாடு சரிவர உள்ளதா? எனக் கவனித்து வந்தால் முற்றிய பின்னர் புதிய ராணித் தேனீ கொடுத்தால் இக்கூட்டங்கள் ஏற்றுக் கொள்ளாது. மேலும் கொடுக்கப்பட்ட ராணித் தேனீயைக் கொன்றுவிடும். எனவே இத்தகைய கூட்டங்களை ஒரு வலுவான ராணியுள்ள கூட்டத்துடன் இணைத்து விடுவதே இப்பிரச்சனைக்கு உரிய தீர்வாகும்.

தேனீக் கூட்டங்களை இணைத்தல்

ஒவ்வொரு தேனீக் கூட்டத்திற்கும் தேனீப் பெட்டிக்கும் ஒரு தரப்பட்ட வாசனை இருக்கும். எனவே தேனீக் கூட்டங்களை நேரடியாக இணைத்தல் கூடாது. அவ்வாறு இணைத்தால் இரு தேனீக் கூட்டங்களைச் சேர்ந்த தேனீக்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு இறக்க நேரிடும். எனவே தேனீக் கூட்டங்களை எடுத்தல் அவசியம். பொதுவாகத் தேனீக் கூட்டங்களை மதுர வரத்துக் காலங்களில் எளிதாக இணைக்கலாம்.

ஒரு ராணியில்லாத கூட்டத்தை மற்றொரு ராணியுள்ள கூட்டத்துடன் சேர்க்க

பணித் தேனீக்கள் முட்டையிடத் தொடங்கிய கூட்டத்தை ராணித் தேனீ நன்கு செயலாற்றும் மற்றொரு கூட்டத்துடன் சேர்க்க

பிரிந்து வந்த கூட்டங்களைத் தாய்க் கூட்டத்துடன் இணைக்க

வலுக் குறைந்த தேனீக் கூட்டங்களை இணைத்து ஒரு வலுவான தேனீக் கூட்டத்தை உருவாக்க

பிரித்து வைத்த கூட்டத்தைத் தாய் கூட்டத்துடன் இணைக்க

செயல் திறன் குறைவான கூட்டத்தை நன்கு செயலாற்றும் கூட்டத்துடன் இணைக்க

இணைக்கும் முறைகள்

காகித முறை

காகித முறை கொண்டு தேனீக் கூட்டங்களை எந்தக் காலக் கட்டத்திலும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் இணைக்கலாம்

முதலில் இணைக்கப்பட வேண்டிய கூட்டங்கள் மெழுகு அந்திப் பூச்சி, உண்ணி, நோய் ஆகியவற்றின் தாக்குதல் இல்லாமல் இருக்கின்றனவா என ஆய்வு செய்ய வேண்டும். மேலும் ராணித் தேனீக்களின் செயல்பாட்டினையும் கண்டறிந்து செயல் திறன் குறைவான ராணியை நீக்க வேண்டும். ஆரோக்கியமான கூட்டங்களை மட்டுமே இணைக்க வேண்டும்

இணைக்கப்பட வேண்டிய கூட்டங்களை நாளொன்றுக்கு ஒரு மீட்டருக்கு மிகாமல் படிப்படியாக நகர்த்தி தேனீப் பெட்டிகளை அருகாமையில் கொண்டு வரவும்

தேனீப் பெட்டிகளின் நுழைவு வாயில்கள் ஒரே திசைப் பார்த்த வண்ணம் இருக்க வேண்டும்

ராணியுள்ள பெட்டியின் மூடியை நீக்கி விட்டு அதன் புழு அறையை ஒரு செய்தித்தாள் கொண்டு மூடவும்

தாளின் மேல் ஆங்காங்கே ஒரு சிறு ஆணி அல்லது சிறு கத்தி கொண்டு சிறுசிறு துளைகள் போடவும்

தாளின் மீது தேன் கரைசல் அல்லது சர்க்கரைப் பாகை இருபுறமும் சிறிது தடவினால் கூட்டங்களின் இணைப்பு விரைவாக நடைபெறும்

விரித்து வைக்கப்பட்ட காகிதத்தின் மேல் ராணியற்ற அல்லது ராணி நீக்கப்பட்ட பெட்டியின் அடிப்பலகையை நீக்கிவிட்டு வைக்கவும்

மேல் பெட்டியின் நுழைவு வழியை மூடி விடவும். அப்பொழுது தான் இணைப்பு முயற்சி முழு வெற்றி பெறும்

தேனீக்கள் காகிதத்தில் இடப்பட்ட சிறு துளைகளைக் கடித்துப் பெரிதாக்கும். இத்தருணத்தில் இரு கூட்டங்களின் பெட்டியின் வாசனையும் ஒன்றாகிவிடும். இதனால் தேனீக்கள் தங்களுக்குள் சண்டை போடாமல் ஒன்று சேர்ந்து விடுகின்றன

கடித்துக் குதறப்பட்ட காகிதத் தூள்கள் நுழைவு வழிக்கு விடும்

இரு கூட்டங்களும் முற்றிலுமாக ஓரிரு நாட்களில் இணைந்து விடும்

பின்னர் மேல் பெட்டியில் நல்ல நிலையில் உள்ள புழு அடைகளையும் தேன்அடைகளையும் எடுத்துக் கீழ்ப் பெட்டியில் வைத்து விட்டு மேல் பெட்டியை நீக்கி விடவும். அதன் பின்னர் அடிப்பலகையைச் சுத்தம் செய்யவும்

பிற முறைகள்

மதுர வரத்து காலங்களில் இணைக்கப்பட வேண்டிய கூட்டங்களுக்குப் புகை கொடுத்து தேனீக்களைச் சாந்தப் படுத்திய பின்னர் தேனீக்களைச் சட்டங்களிலிருந்து ஒரே பெட்டியில் உதறி ஒன்று சேர்க்கலாம்

கூட்ட வாசனையை மறைக்கத் தேனீக்களின் மீது அத்தர் தெளித்தும், இரு வேறு கூட்டங்களை உடனடியாக ஒன்று சேர்க்கலாம்

தேனீக் கூட்டங்களைப் பிரித்தல்

வலுவான தேனீக் கூட்டங்களை வளர்ச்சி பெறும் காலங்களில் பிரித்து வைத்துப் புதிய கூட்டங்களை உருவாக்கலாம். ஆனால் பொதுவாகத் தேனீக் கூட்டங்களைப் பிரித்து வைத்தால் தேன் மகசூல் குறையும். மதுர வரத்து துவங்குவதற்கு ஒரு மாதம் முன்னரே கூட்டங்களைப் பிரித்து வைத்தால் பிரித்த கூட்டங்களும் விரைந்து வளர்ந்து தேன் சேமிக்கும்

பிரிவினை ஏன்?

கூட்டங்களின் எண்ணிக்கையைக் கூட்ட

உபரியாக உருவாக்கப்பட்ட கூட்டங்களை விற்றுக் கூடுதல் வருமானம் ஈட்ட

பிரியத் தயார் நிலையில் உள்ள கூட்டங்கள் பிரிந்து செல்லாது தடுக்க

பிரித்து வைத்த கூட்டத்தை மீண்டும் தாய்க் கூட்டத்துடன் இணைத்துக் கூடுதல் தேன் மகசூல் பெற

பிரிவினை எப்பொழுது?

வலுவான கூட்டங்களே பிரிக்க ஏற்ற கூட்டங்களாகும். இத்தகைய கூட்டங்களில் தேனீக்கள் அதிக எண்ணிக்கையில் மூடியின் உட்புறத்தில் பரவித் திரளாக இருக்கும். மேலும் அடையின் மேல் தேனீக்கள் நெருக்கமாகவும் ஒன்றின் மேல் ஒன்று அமர்ந்து கொண்டும் இருக்கும். இத்தகைய தருணத்தில் கூட்டத்தைப் பிரிக்கலாம்

போதிய மதுர வரத்தும் மகரந்த வரத்தும் இருக்கும் காலங்களில் மட்டுமே கூட்டங்களைப் பிரிக்க வேண்டும். மதுர வரத்து குறைவாக இருக்கும் காலங்களில் கூட்டங்களுக்கு அடிக்கடி சர்க்கரைப் பாகு கொடுப்பதன் மூலம் கூட்ட வளர்ச்சியைத் தூண்டி, ராணி அறைகளைக் கட்டச் செய்தும் கூட்டங்களைப் பராமரிக்கலாம்

தேனீக் கூட்டத்தில் ஆண் தேனீக்கள் போதுமான எண்ணிக்கையில் இருக்கும் பொழுது மட்டுமே கூட்டங்களைப் பிரிக்க வேண்டும். அப்பொழுதுதான் புதிதாக உருவாகி வரும் ராணித்தேனீயின் புணர்ச்சி முயற்சிகள் வெற்றி பெறும்

ராணித் தேனீயின் புணர்ச்சிப் பறப்பிற்கு சாதகமாக வானிலை இருத்தல் அவசியம். கூடுதலான மழை மற்றும் காற்று புணர்ச்சிப் பறப்பை தாமதப்படுத்தும். எனவே அத்தகைய தருணங்களில் கூட்டங்களைப் பிரிக்கக் கூடாது

ராணி வளர்ப்பு அறைகள் கட்டும் காலமே கூட்டங்களைப் பிரிக்க ஏற்ற காலமாகும். கூடுதலாகத் தேன் சேகரிக்கும் ஆற்றல் குறைவான கொட்டும் தன்மை, குறைவான கூட்டம் பிரியும் சுபாவம் மற்றும் நோயற்ற தன்மை உடைய கூட்டங்களில் இயற்கையாக உருவாகும் ராணி வளர்ப்பு அறைகளைப் பயன்படுத்திப் புதிய தரமான தேனீக் கூட்டங்களை உருவாக்கலாம் அல்லது செயற்கை முறையில் நல்ல ராணித் தேனீக்கள் உருவாக்கியும் கூட்டங்களைப் பெருக்கலாம்

கலவைப் பிரிவு

எந்த ஒரு தேனீக் கூட்டமும் பிரிப்பதற்கு தக்க வலு இல்லாது இருந்தால் ஒவ்வொரு தேனீக் கூட்டத்திலிருக்கும் ஒரு புழு அடையைத் தேனீக்களுடன் எடுத்து அவற்றை ஒரு பெட்டியில் வைத்து அதற்கு ஒரு மூடப்பட்ட ராணி வளர்ப்பு அறை கொடுத்தும் ஒரு புதுத் தேனீக் கூட்டத்தை உருவாக்கலாம்

ஏழ்மைப் பிரிவு

பிரித்து வைத்த கூட்டங்களை தங்களுக்கென ஒரு ராணியை உற்பத்தி செய்து கொள்ள விடுதல் தவறு. அவ்வாறு விடுவதால் தோன்றும் ராணித் தேனீக்கள் சரிவரப் பேணி வளர்க்கப்படாததால் பொதுவாகச் செயல்திறன் குறைந்தவையாக இருக்கும். மேலும் அத்தகைய கூட்டங்கள் துரிதமாக வளர்ச்சி பெறுவதும் இல்லை

பிரிக்கும் நுட்பங்கள்

முதலில் பிரிக்கப்பட வேண்டிய கூட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும்

ஒரு தேனீக் கூட்டத்தைப் பிரிக்கும் பொழுது ராணித் தேனீயை அவசியம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்

ராணித் தேனீ உள்ள அடையை வேறொரு தூய்மையான பெட்டியில் வைக்க வேண்டும். அத்துடன் ஒன்று அல்லது இரண்டு புழு அடைகளையும் ஒரு உணவு அடைகளையும் வைக்க வேண்டும். புழு அடைகளில் ராணி வளர்ப்பு அறைகள் இருந்தால் அவை அனைத்தையும் ஒன்று விடாது கிள்ளி எடுத்துவிட வேண்டும். புழு அடைகளுக்கு இடையில் காலிச் சட்டங்களையோ அல்லது மெழுகுத் தாள் பொருத்தப்பட்ட சட்டங்களையோ புதிய அடைகள் கட்டுவதற்காகக் கொடுக்க வேண்டும். பிரிக்கப்பட்ட கூட்டத்தில் தேன் அறை இருந்தால் அதனை ராணியுள்ள பிரிவுக் கூட்டத்திற்கே கொடுக்க வேண்டும்

பின்னர் ராணித் தேனீ இருந்த பெட்டியில் மீதம் உள்ள புழு அடைகளில் நல்ல நிலையில் உள்ள மூடியிடப்பட்ட ராணி வளர்ப்பு அறை ஏதேனும் ஒன்றை மட்டும் விட்டு விட்டு பிற ராணி வளர்ப்பு அறைகளைக் கிள்ளி எடுத்துவிட வேண்டும்

கூட்டத்தின் வலு மற்றும் ராணித் தேனீயைப் பிரித்த பின்னர் புழு அறையில் மீதமுள்ள புழு அடைகளின் எண்ணிக்கை ஆனியவற்றைப் பொறுத்து மேலும் ஒரு பிரிவு கூட எடுக்கலாம். ஆனால் அவ்வாறு பிரிக்கும் பொழுது ராணியின்றிப் பிரித்து வைக்கப்பட்ட ஒவ்வொரு கூட்டத்திற்கும் குறைந்தது இரண்டு புழு அடைகளாவது இருக்குமாறு பிரிக்க வேண்டும்.

பிரித்து வைக்கப்பட்ட ராணி இல்லாத ஒவ்வொரு பிரிவிற்கும் மறுநாள் வேறு ஒரு நல்ல கூட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட மூடப்பட்ட ராணி வளர்ப்பு அறையை இரு புழு அறைச் சட்டங்களுக்கும் நடுவில் கொடுக்க வேண்டும். இவ்வாறு பிரித்த அன்றே ராணி வளர்ப்பு அறை கொடுக்காமல் மறுநாள் கொடுக்கும் பொழுது ராணி அறைகள் எளிதில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன

ராணியுள்ள பிரிவுக் கூட்டத்தைப் பிரித்த பின்னர் பிரிக்கும் முன் பெட்டி இருந்த இடத்தை விட்டு ஒரு அடி தள்ளியும் ராணியில்லாத கூட்டத்தை அறை அடி தள்ளியும் வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கும் பொழுது வயல் வெளித்தேனீக்கள் சற்று தட்டுத் தடுமாறி எல்லாக் கூட்டங்களுக்கும் சமமாகச் செல்லும் சில நேரங்களில் எல்லா வயல் வெளித் தேனீக்களும் ராணியுள்ள பெட்டியை நாடிச் சென்று விடும். இதனால் பிரித்து வைத்த கூட்டங்கள் நலிவுற்று அழிய நேரும். இதனைத் தவிர்க்கப் பிரித்து வைத்த மறுநாள் உணவு கொண்டு வரும் தேனீக்கள் பெட்டிகளுக்குள் எவ்வாறு செல்கின்றன எனக் கண்காணிக்க வேண்டும். தேனீக்கள் சமமாகச் செல்லவில்லையெனில் ராணியுள்ள கூட்டத்தை முன்பு பெட்டி இருந்த இடத்தைவிட்டு சற்று தள்ளியும், ராணி இல்லாத பிரிவுக் கூட்டங்களைச் சற்று அருகேயும் நகர்த்தி வைக்க வேண்டும்

ராணியுள்ள பிரிவுப் பெட்டியை பெட்டி முன்பு இருந்த அதே இடத்திலும் ராணி இல்லாத பெட்டியை புதிய இடத்தில் வைப்பதால் வயல் வெளித் தேனீக்கள் அனைத்தும் ராணியுள்ள பிரிவிலும் தாதித் தேனீக்கள் அனைத்தும் ராணியில்லாத பிரிவிலும் தாதித் தேனீக்கள் அனைத்தும் ராணியில்லாத பிரிவிலும் தங்கி விடும்

பிரித்து வைக்கப்பட்ட கூட்டங்களுக்கு தடுப்புப் பலகை ஒன்றினை புழு அடைகளுக்கு எடுத்துத் தருவது. கூட்டின் வெப்பநிலையைப் பராமரிக்கவும் எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் உதவும். மதுர வரத்து குறைவாக இருந்தால் சர்க்கரைப் பாகு அவசியம் தருதல் வேண்டும். ராணியில்லாத பிரிவுக் கூட்டங்களுக்குக் கூடுதலாகத் தாதித் தேனீக்களைத் தருவது புதிதாகப் பிறந்து வளரும் ராணிகளுக்குப் போதிய உணவு கிடைக்க வழி வகுக்கும்

தேனீக்கள் சூழ்ந்துள்ள புழு அடையின் மீது சிறிது புகையை செலுத்துவதால் வயல் வெளித் தேனீக்கள் அடையை விட்டுப் பறந்து விடும். பறக்காமல் அடையில் தங்கும் தேனீக்களில் பெரும்பாலானவை தாதித் தேனீக்களே இத்தாதித் தேனீக்களை ஒரு தேனீ புருசு கொண்டு நீக்கி ராணியற்ற பிரிவிற்குக் கொடுத்து விடலாம்

பிரித்து வைத்த பெட்டிகளில் புதிய ராணி வந்துவிட்டதா என்பதை அறிய ஒரு வாரம் கழித்தும் பார்க்க வேண்டும். அத்தருணத்தில் அத்தகைய கூட்டங்கள் நிலை பெற்றுத் தனிக் கூட்டங்களாக உருவாக ஒரு புழு அடை ஒன்று கொடுக்க வேண்டும். புதிதாக வந்த ராணி புணர்ச்சி முடிந்து முட்டையிடத் தொடங்கியதை அறிய மீண்டும் ஒரு வாரம் கழித்துப் பார்க்க வேண்டும்.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்