மருந்து கூர்க்கன்

மூலிகை பயிரை வளர்த்தால் அதிக லாபம் ஈட்டலாம். குறுகிய கால மருந்துப் பயிர்களில் மருந்து கூர்க்கன் அல்லது கூர்க்கன் கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது.

பயிரின் சிறப்பு, பயிரிடுவது எப்படி?

இந்த மருந்து கூர்க்கனின் வேர்க்கிழங்குகள் மருந்து பொருள்களில் அதிகம் பயன்படுகின்றன. வேர்கள் கேரட்டை போல் பருமனாகவும், 30 செ.மீ. வரை நீளமாகவும் இருக்கும். வேர்கள் இளம் மஞ்சள் நிறத்துடனும், வாசனைத் தன்மையுடனும் இருக்கும். இவற்றில் ரத்த அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படும் போர்ஸ்கோலின் எனும் மூலப்பொருள் உள்ளது. இது கிளாகோமா எனும் கண்கோளாறு நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது.

மருந்து கூர்க்கனில் மங்கானிபெரு, கார்மாய் எனும் இரு ரகங்கள் இருக்கின்றன. மங்கானிபெரு கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இதன் கிழங்குகள் பருமனாகவும், 30 செ.மீ வரை நீளமாகவும் இருக்கும். சேலம் மாவட்டத்தில் பயிரிடப்படுவதும் மங்காணிபெரு ரகம் தான்.

மருந்து கூர்க்கனை செம்மண் அல்லது மணல் செம்மண் அல்லது சரளை வகை மண் உள்ள இடங்களில் சாகுபடி செய்யலாம். வேரின் வளர்ச்சிக்கு மண்ணின் தன்மை கடினமாக இருக்கக் கூடாது. வடிகால் வசதி உடைய மணற்பாங்கான மண் வகைகள் மிகவும் ஏற்றவை.

நீர்த் தேங்கும் மண் வகைகள் இதன் சாகுபடிக்கு ஏற்றதல்ல. ஒரளவு மழையளவு ஆண்டு முழுவதும் 70 செ.மீ. உள்ள சமவெளிப் பகுதிகள் மருந்து கூர்க்கன் சாகுபடிக்கு ஏற்றவை.

தாழ்வான மலைச்சரிவுகளிலும் நன்றாக வளரும். தமிழ்நாட்டில் நீர்ப்பாசன வசதியுடன் இதை சாகுபடி செய்யலாம்.

நுனித்தண்டுகள் மூலம் கிழங்குகளை பயிர்பெருக்கம் செய்யலாம். மூன்று அல்லது நான்கு கணுக்களை உடைய 10 செ.மீ. நீளமுள்ள நுனிதண்டங்களை மட்டுமே நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.

நிலத்தை உழுது ஹெக்டேருக்கு 15 டன் தொழுஎரு இட்டு மண்ணை பயன்படுத்த வேண்டும். பிறகு 60 செ.மீ. இடைவெளியில் பார்களைப் பிடிக்க வேண்டும். பயிர்களின் பக்கவாட்டில் தண்டுகளை ஜூன்-ஜூலை அல்லது செப்டம்பர் -அக்டோபர் நடவு செய்ய வேண்டும். 60 செ.மீ. இடைவெளியில் அமைக்கப்பட்ட பார்களில் 45 செ.மீ. இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். ஒரு ஹெக்டேரில் நடவு செய்ய 37,030 செடிகள் தேவைப்படும். சற்றே வளம் குறைந்த நிலங்களில் செடிகளை 30 செ.மீ. இடைவெளியில் நடவு செய்யலாம். இந்த முறையில் ஹெக்டேருக்கு 55,000 செடிகள் நடுவதற்கு தேவைப்படும்.

பயரிடும் முறைகள்

ஒரு ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து, 50 கிலோ சாம்பல் சத்து உரங்கள் ஆகியவற்றை செடிகள் நட்ட 30 ஆவது நாளிலும் பிறகு 45-ஆவது நாளிலும் சமமாகப் பிரித்து இட வேண்டும். நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையாக உள்ள நிலங்களுக்கு ஹெக்டேருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட் நுண்ணூட்டச் சத்து உரத்தை அடியுரமாக இடுவது அவசியம்.

செடிகளை நட்ட முதல் மாதத்தில் வாரம் ஒரு முறையும், பிறகு பத்து நாள்கள் இடைவெளியிலும் நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். கிழங்குகளை அறுவடை செய்வதற்கு 10 நாள்கள் இருக்கும் போது, கடைசி பாசனத்தை நிறுத்தி விடவேண்டும்.

செடிகளை நட்ட ஆறு முதல் ஏழு மாதங்களில் கிழங்குகள் அறுவடைக்கு தயாராகின்றன. இந்தத் தருணத்தில் செடிகளை தாழ் அறுத்து மண்ணில் போதிய அளவு ஈரம் இருக்குமாறு மண்ணைத் தோண்டி, கிழங்குகளைத் சேதமின்றி எடுக்க வேண்டும். இதற்கு உழவு கலப்பையைக் கொண்டு மேலாக உழுது கிழங்குகளைச் சேதமின்றி எடுக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 15-20 டன் பச்சை வேர்கள் அல்லது 2000-2200 கிலோ உலர்ந்த வேர்கள் மகசூலாக கிடைக்கும்.

பச்சை கிழங்குகளை நீளவாக்காகவும், குறுக்காகவும் சிறிய துண்டுகளாக கத்தி கொண்டு வெட்டி பிறகு வெயிலில் சீராக உலர்த்த வேண்டும்.

ஆதாரம்: பழனி விவசாயி, நெமேலி