பசுமைக்கூடத்தின் வடிவமானது பயிர் வளர்ச்சிக்கேற்ற பாதுகாப்பான சுற்றுப்புறத்தினை அளிப்பதற்கு வழிவகுக்கும் சிறந்த தொழில்நுட்பத்துடன் அமைக்கப்படவேண்டும். பயிர் மற்றும் பயிர் சார்ந்த பொருட்கள் உற்பத்திக்கும் திறந்த வெளியில் சாத்தியமில்லாத தரமான உற்பத்திக்கும் பசுமைக்கூடம் உதவுகின்றது. திறந்த வெளியில் செய்யப்படும் பயிர் சாகுபடியை விட இப்பசுமைக்கூடங்களில் செய்யப்படும் முறைக்கு அதிக முதலீடு தேவைப்படுவதால், இதனால் கிடைக்கப்பெறும் இலாபமும் அதிகமாக இருக்கவேண்டும். பசுமைக்கூட கட்டமைப்பானது பயிர் வளர்ச்சிக்குத் தேவையான இயற்கை ஒளிபுகும் இயல்புள்ள மூடாக்குப் போர்வையினைக் கொண்டிருக்க வேண்டும். செழிப்பான பயிர் வளர்ச்சிக்கு பசுமைக்கூடத்தின் கட்டமைவு, மூடாக்குப் போர்வை மற்றும் வெப்பநிலை கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியன சரியான முறையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்திய சூழ்நிலைக்கு எளிமையான முறையில் குறைந்த செலவுடன் அமைக்கப்படும் க்யொன்செட் வகை, பல அடுக்கு (multispan) பசுமைக்கூடமே சிறந்து விளங்குகின்றது. இயற்கை காற்றோட்ட வகை மற்றும் விசிறி மற்றும் தண்டு வகை பசுமைக்கூடங்களுக்கு 200 மைக்ரான் தடிப்புடைய ஒற்றைச் சவ்வு புறஊதா எதிர்ப்புத்திறன் கொண்ட குறைந்த அடர்வு பாலிஎத்திலின் போர்வைகளே போதுமானதாக திகழ்கின்றது. சுருங்கிப்போகுதல் மற்றும் கிழிந்து போகுதல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு இம்மூடாக்குப் போர்வைகள் மிகவும் உறுதியாக கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இணைப்பதற்கு ஆணி மற்றும் திருகாணிகளை பயன்படுத்தாதிருந்தால் கிழிதலுக்கான வாய்ப்பு தவிர்க்கப்படுகின்றது. இதற்கு பதிலாக ‘T’ வடிவ பூட்டு (lock) அல்லது ‘ட’ வடிவ பூட்டினைப் பயன்படுத்தி இணைக்கலாம். போர்வையை மாற்றுவதும் இதனால் சுலபமாகின்றது. வடிவம் கட்டமைப்பானது பல்வேறு விதமான கீழ்வரும் சுமைகளைத் தாங்க வேண்டியுள்ளதால் அதற்குத் தகுந்தவாறு வடிவமைக்க வேண்டும். அ. உயிரற்ற சுமை அனைத்து கட்டுமான சுமைகள், போர்வை, வெப்பம் மற்றும் குளிரூட்டும் கருவி, தண்ணீர் குழாய்கள் மற்றும் நிரந்தரமாக பொறுத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளும். ஆ. உயிருள்ள சுமை உபயோகிப்பால் ஏற்படும் சுமை (தொங்கு தொட்டிகள், அலமாரிகள் மற்றும் மேற்கூரைமேல் பணிபுரிந்து கொண்டிருக்கும் வேலையாட்களின் சுமை உட்பட) பசுமைக்கூடத்தின் ஒரு சதுர அடி அதிகபட்சம் 15 கிலோ எடையை தாங்கும் சக்தி கொண்டதாக அமைக்கப்படவேண்டும். மேற்கூரையின் ஒவ்வொரு பகுதியும் 45 கிலோ எடையை தாங்கக் கூடியதாக அமைக்கவேண்டும். இ. காற்று சுமை ஒரு மணிக்கு 110 கி.மீ என்ற வேகத்தில் வீசும் காற்றின் வேகத்தையும் குறைந்தபட்சம் ஒரு சதுர அடிக்கு 50 கிலோ எடையை தாங்கும் சக்தியைக் கொண்டதாகவும் பசுமைக்கூடம் கட்டமைக்கப்பட வேண்டும். ஈ. பனிச்சுமை குறிப்பிட்ட இடத்தின் சராசரி பனிப்பொழிவைப் பொறுத்து கணக்கிடவேண்டும். பசுமைக்கூடத்தில் துத்தநாகம் பூசிய இரும்புக் குழாய்களை 60 செ.மீ x 60 செ.மீ x 60 செ.மீ என்ற இடைவெளியில் பயன்படுத்தவேண்டும். செங்குத்து கம்புகளை சுமார் 60 செ.மீ உயரத்திற்கு 5 செ.மீ அடர்த்தியுள்ள பிசிசி குழாயினைக் கொண்டு உள்ளடக்க வேண்டும். இதனால் கம்புகள் துருப்பிடிக்காமல் காக்கப்படுகின்றன. திசை அமைவு காற்றடிக்கும் திசை, இடத்தின் குறுக்கையளவு மற்றும் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் வகை ஆகியவற்றைப் பொறுத்தே பசுமைக்கூடத்தின் திசையமைவு இருக்கவேண்டும். குறுக்கையளவு 40 டிகிரி வடக்கிற்கும் அதிகமாக இருப்பின் ஒற்றை பசுமைக்கூடங்கள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும். குறுக்கையளவானது 40 டிகிரி வடக்கிற்கும் குறைவாக இருப்பின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அமைக்கப்படவேண்டும். ஒரு பசுமைக்கூடத்தின் நிழல் இன்னொரு பசுமைக்கூடத்தின் மேல் விழாமலிருக்க கிழக்கிலிருந்து மேற்குதிசை நோக்கியிருக்குமாறு அமைக்கவேண்டும். எனினும், காற்றடிக்கும் திசை மற்றும் குறுக்கையளவு ஆகியவற்றையும் கருத்தில் கொள்ளவேண்டும். காற்றின் பாதிப்புகள் இயற்கை காற்றோட்ட வசதி கொண்ட பசுமைக்கூடத்தைப் பொறுத்தவரை இயற்கை காற்றடிக்கும் திசையின் பலன்களை உபயோகித்து கொள்ளவேண்டும். குறிப்பாகக் கோடைக்காலத்தில் வீசும் காற்றின் திசையிலிருந்து பசுமைக்கூடத்தின் அதிகபட்ச நீளம் செங்குத்தாக அமைந்திருக்கவேண்டும். விசிறி மற்றும் திண்டு வகை பசுமைக்கூடத்தில், இயற்கை காற்றின் திசையானது விசிறியிலிருந்து வரும் காற்றின் திசையிலேயே இருக்கவேண்டும். பசுமைக்கூடத்தின் அளவு இயற்கை காற்றோட்ட வகை பசுமைக்கூடமானது 50 மீ x 50 மீ அளவிற்கும் அதிகமாக இருத்தல் கூடாது. பசுமைக்கூடங்கள் மிகவும் பெரிதாக அமைக்கப்பட்டால் குறைவான காற்றோட்டம் ஏற்பட்டு அதனால் உட்புற வெப்பநிலை அதிகரித்துவிடும். ஆவியாக்குதலால் குளிரூட்டும் பசுமைக்கூட அளவானது 60 மீட்டருக்கும் அதிகமாக இருத்தல் கூடாது. பசுமைக்கூடங்களுக்கான இடைவெளி இயற்கை காற்றோட்ட பசுமைக்கூடங்களுக்கு இடையே 10 முதல் 15 மீ இடைவெளி இருக்கவேண்டும். இதன் மூலம் ஒரு பசுமைக்கூடத்திலிருந்து வெளியில் தள்ளப்படும் வெப்ப காற்று அடுத்த பசுமைக்கூடத்திற்குள் புகாதவாறு தடுக்கப்படுகின்றது. பசுமைக்கூடத்தின் உயரம் 50 மீ x 50 மீ அளவுடைய பசுமைக்கூடத்தின் உயரம் 5 மீ வரை இருக்கலாம். பசுமைக்கூடத்தின் அளவு குறையும்போது உயரத்தினையும் அதற்கேற்றவாறு குறைத்துக் கொள்ளலாம். உயரம் அதிகரிக்கும்போது கட்டமைப்பிற்கும் மூடாக்கிற்கும் காற்றின் சுமை அதிகரிக்கின்றது. பக்கவாட்டில் 2 மீ அகலத்திற்கும் மேற்கூரையிலிருந்து 1மீ அகலத்திற்கும் காற்றோட்டம் இருக்கலாம். கட்டமைப்பு வடிவம் பசுமைக்கூடத்தின் வடிவம் தேவையான பாதுகாப்பு, பயன், கட்டமைப்பு ஒருங்கிணைப்பு கொண்டு உபயோகத்திற்கு ஏதுவானதாகவும் இருக்கவேண்டும். கட்டமைப்பானது தேவைக்கேற்ற அனைத்து உயிரற்ற, உயிருள்ள, காற்று மற்றும் பனிச் சுமைகளை தாங்கவல்லதாக இருக்கவேண்டும். அடித்தளம், தூண்கள் மற்றும் கிளைக்கம்பிகளும் இதற்கேற்றவாறு அமைக்கப்பட்டிருக்கவேண்டும். தேசிய பசுமைக்கூட உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தரநிர்ணயம் (1994) கூறியுள்ளபடி பசுமைக்கூடங்களை வடிவமைக்கவேண்டும். ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்