நோய் தாக்குதல் குறைவு

செம்மண், கரிசல் மண் கலந்த நிலத்தில் நன்கு வளரும் நூல்கோலை, ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய மூன்று அல்லது நான்கு கிலோ விதை தேவைப்படும். ஒரு கிலோ விதை தரத்துக்கேற்ப ரூ. 840 முதல் ரூ. 1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. தரமான விதைகளைத் தேர்வு செய்து விதைக்க வேண்டும். விதை நடவு செய்த இரண்டு மாதங்களில் அறுவடை செய்து விடலாம். புதிதாக நூல்கோல் சாகுபடி செய்யும் விவசாயிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் அறுவடை செய்துவிட வேண்டும். அனுபவத்தைப் பொறுத்துப் பின்னர் மாற்றிக்கொள்ளலாம்.

ஆண்டு முழுவதும் இதைச் சாகுபடி செய்யலாம் என்பது இன்னொரு வசதி. கோடைக் காலத்தைத் தவிர மற்ற காலங்களில் சாகுபடி செய்வது நல்லது. குறிப்பாகக் குளிர் காலங்களில் விளைச்சல் அமோகமாக இருக்கும். நோய் தாக்குதல் மிகவும் குறைவு, கோடைக் காலத்தில் சாகுபடி செய்தால் வெள்ளை பூச்சி, பழுப்புநோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக இந்தக் காலகட்டத்தில் விளைச்சலும் கணிசமாகக் குறைந்துவிடும். விதை நடவு செய்வதற்கு முன்பு அடியுரமாக இயற்கை உரங்களை இட்டால் விளைச்சல் சிறப்பாக இருக்கும்.

அதிக லாபம்

ஒரு ஏக்கருக்கு விதை, கூலி, வாகனப் போக்குவரத்து என ரூ. 20 ஆயிரம்வரை செலவு ஏற்படும். 60 நாட்களில் ஆயிரம் முதல் 1,200 கிலோ நூல்கோலை அறுவடை செய்யலாம். சராசரியாகக் கிலோ ரூ.10 என விற்பனையானாலும், செலவு போக ரூ.1லட்சம் வரை லாபம் சம்பாதிக்கலாம்.

அரிய மருத்துவப் பலன்கள்

நூல்கோலை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது. அத்துடன் புற்றுநோய், ஆஸ்துமா நோய்களை வரவிடாமல் தடுக்கிறது. செரிமானத்துக்கும், ரத்தச் சுழற்சிக்கும் பெரிதும் உதவுகிறது. ரத்தக்கொதிப்பைச் சீராக வைத்திருக்கிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.

ஆதாரம்: வளரும் வேளாண்மை