உருமாற்றங்கள்

பொதுவாக பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சியில் இரண்டு விதமான உருமாற்றங்கள் காணப்படுகின்றன.

முழு உருமாற்றம்

இதில் நான்கு வளர்ச்சி பருவங்கள் தெளிவாகத் தோன்றும். அவை முட்டை, புழு, கூண்டுப்புழு, முழு வளர்ச்சி அடைந்த பூச்சி. அந்துப் பூச்சியின் முட்டையிலிருந்து வெளிவருவது புழு (Caterpillar) என்றும், வண்டு இடும் முட்டையிலிருந்து வெளிவருவது கிரப் (Grub) என்றும், ஈக்கள் இடும் முட்டையிலிருந்து வெளிவருவது மேகட் (Maggot) என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு தாய்ப்பூச்சி இடும் முட்டையிலிருந்து புழுக்கள் வெளிவரும். இந்தப்புழுக்கள் பலமுறை தோலுரித்து வளர்ந்து கூட்டுப்புழுவாக மாறும். கூட்டுப்புழு பருவத்தில் பல்வேறு மாறுதல்களை அடைந்து வளர்ச்சியடைந்த பூச்சியாக வெளிவரும்.

(உம்) வண்ணத்துப்பூச்சி, வண்டு, தேனீ.

குறை உருமாற்றம்

இந்த வகையில் ஒரு தாய்ப்பூச்சி இடும் முட்டையிலிருந்து வெளி வரும் இளம் பூச்சிகள் தாயைப் போன்ற தோற்றத்தில் இறக்கைகள் இல்லாமலும், சிறியதாகவும் காணப்படும். இதற்கு நிம்ப் (Nymph) என்று பெயர். இளம் பூச்சிகள் தொடர்ந்து சில வளர்ச்சி நிலைகளை அடைந்து, முழு வளர்ச்சியடைந்த பூச்சியாக மாறும். இந்த வகையைச் சார்ந்த பூச்சிகளின் வளர்ச்சி பருவங்கள் - முட்டை, நிம்ப், முழுவளர்ச்சியடைந்த பூச்சி ஆகும். உ.ம். நாவாய்ப்பூச்சி, வெட்டுக்கிளி, தத்துப்பூச்சி

பூச்சிகளை அடையாளம் காணுதல்

பூச்சிகளின் உடல் தலை, மார்பு, வயிறு என மூன்று தனித்தனிப் பாகங்களாக தெளிவாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. பூச்சியின் உடல் பல கண்டங்களால் ஆனது. மார்புப் பகுதியில் மூன்று ஜோடி கால்களும் இரண்டு ஜோடி இறக்கைகளும் காணப்படும். இவற்றின் உடல் வெளிக்கூடு கைட்டின் என்ற பொருளால் ஆனது.

வண்ணத்துப்பூச்சி வகுப்பு

இவ்வகைப் பூச்சிகளுக்கு உறிஞ்சி உண்ணும் வாய்ப்பாகம் காணப்படும். இது உறிஞ்சுகுழாய் (Proboscis) எனப்படும். இதன் மூலம் தேன் மற்றும் திரவ நிலையில் இருக்கும் இனிப்பான பொருட்களை நேரடியாக உறிஞ்சி உண்ணும். இவற்றின் புழுக்கள் மட்டுமே அதிக சேதத்தை ஏற்படுத்தும். வண்ணத்துப்பூச்சிகள் மகரந்தச் சேர்க்கைக்குப் பயன்படும். உம். எலுமிச்சை இலை வண்ணத்துப்பூச்சி

வண்டு வகுப்பு

இவற்றின் வாய்ப்பாகம் தாவரங்களின் ஒவ்வொரு பாகத்தையும் கடித்தும், சுவைத்தும் உண்பதற்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். அதாவது மேல்தாடை, கீழ்தாடை என இரண்டு தாடைகளும், தாடைகளினுள் ரம்பம் போன்ற பற்களும் காணப்படும். இவ்வகுப்பில் வண்டுகளும் அவற்றின் புழுக்களும் சேதப்படுத்தும். உம். தென்னை சிவப்புக் கூன் வண்டு, கத்தரி புள்ளி வண்டு.

ஈ வகுப்பு

இவ்வகைப் பூச்சிகளுக்கு ஒற்றி எடுத்து உண்ணும் வகையில் வாய்ப்பாகம் காணப்படும். இதன் மூலம் திரவநிலையில் இருக்கும் உணவுகளையும், உமிழ்நீரில் எளிதில் கரையக்கூடிய உணவுப்பொருட்களையும் உண்ணமுடிகிறது. கீழ்த்தாடை நன்கு வளர்ந்து ஒரு நீண்ட உறிஞ்சு குழாயாக மாற்றப்பட்டிருக்கும். உம். பழ ஈ, சோளம், குருத்து ஈ.

குளவி, தேனீ வகுப்பு

இவ்வகைப் பூச்சிகளுக்கு மென்று உண்ணும் வகையில் வாய்ப்பாகம் காணப்படும். இதன் மூலம் கெட்டியான திரவ நிலையில் இருக்கும் உணவுப்பொருட்களை உட்கொள்கிறது. உ.ம். டிரைக்கோகிரம்மா குளவி, தேனீ. இந்த நான்கு வகுப்புகளும் முழு உருமாற்றத்தை கொண்டவை.

வெட்டுக்கிளி வகுப்பு

தத்தித் தத்தி செல்லும் சிறியது முதல் மிகப்பெரிய வெட்டுக்கிளிகள் வரை பல நிறங்களிலும், பல தோற்றங்களிலும் உயிர் வாழ்கின்றன. இவை தாவரங்களின் தளிர் பாகங்களை கடித்து உண்டு சேதம் விளைவிக்கின்றன. உம். வெட்டுக்கிளிகள், தட்டான் பூச்சிகள்

கரையான் வகுப்பு

இவை பச்சைப் பொருட்களையும், காய்ந்த பொருட்களையும் சேதப்படுத்துபவை. சில கரையான்கள் மண்ணிற்கு அடியில் சேதப்படுத்துபவை. இவை கடித்து மென்று உண்ணும் வாய்ப்பாகத்தைக் கொண்டது. உ.ம். சிறுகரையான், நீர்க்கரையான், பால்கரையான்.

நாவாய்ப்பூச்சி வகுப்பு

இவ்வகைப் பூச்சிகள் தாவரங்களில் கடுமையான சேதம் விளைவிக்கின்றன. கதிர்களில் உள்ள பால் பொருளை உறிந்துவிடும். மேலும் இப்பூச்சிகள் இருக்கும் இடத்தில் ஒரு வித துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கும். இப்பூச்சிகள் பல தோற்றங்களில் காணப்படும். உம். சிவப்பு நாவாய்பூச்சி, நெல்நாவாய்ப்பூச்சி, சாம்பல் நாவாய்ப்பூச்சி.

செதில்கள் வகுப்பு

இவ்வகுப்பைச் சேர்ந்த பூச்சிகள் அனைத்தும் சிறியதாகக் காணப்படும். தாவரத்தின் இலைகள், தண்டுப்பகுதி, காய்கள் போன்ற பகுதிகளில் இருந்து சாற்றை உறிந்து வாழும். உ.ம். செதில்கள், பேன்கள், அசுவினிகள். இவை அனைத்தும் குறை உருமாற்றத்தைக் கொண்டவை.

பூஞ்சைகளால் ஏற்படும் நோய் அறிகுறிகளைக் கண்டறிதல்

இலைப்புள்ளி (Leaf spot)

பூசணம் தாக்கப்பட்ட இலைகளில் பழுப்பு, கரும்பழுப்பு, கருப்பு அல்லது சிவப்பு நிறப் புள்ளிகள் தோன்றுகின்றன. இப்புள்ளிகள் நாளடைவில் ஒன்றோடொன்று இணைந்து பெரிய புள்ளிகளாக மாறி, இலை காய்ந்து, கருகி, உதிர்ந்துவிடும். பயிர் மகசூல் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

உ.ம். நெல் செம்புள்ளி நோய், நிலக்கடலை டிக்கா இலைப்புள்ளி நோய்

இலைக்கருகல் (Leaf blight)

பூசணம் தாக்குவதால் இலைகளின் பெரும்பகுதி பழுப்பு அல்லது கரும்பழுப்பு நிறமாக மாறி, நாளடைவில் அப்பகுதியிலுள்ள திசுக்கள் மடிந்து, கருகி, இலைகள் உதிர்ந்துவிடுகின்றன. உ.ம். உருளைக்கிழங்கு இலைக்கருகல் நோய், சோளம் இலைக் கருகல் நோய்.

அழுகல் (Rot)

நோயால் தாக்கப்பட்ட பயிர்களின் தண்டு அல்லது வேர் அல்லது பழங்களின் உட்திசுக்கள் அழிக்கப்பட்டு, செடி முழுவதும் அழுகி விரைவில் வாடி மடிந்துவிடும். தாக்கப்பட்ட பகுதியில் பூசண வளர்ச்சி மற்றும் பூசண இழை முடிச்சுக்களைக் காணலாம். அழுகிய செடியைப் பிடுங்கும்போது வேருடன் எளிதாக வந்துவிடும். உம். நெல் தண்டழுகல் நோய், புகையிலை கருந்தண்டழுகல் நோய், துவரை வேரழுகல் நோய்

சாம்பல் (Powdery mildew)

தாக்கப்பட்ட பயிரின் இலைகளின் மேற்பரப்பிலோ (Powdery mildew) அல்லது அடிப்பரப்பிலோ (Downy mildew) வெண்மை அல்லது சாம்பல் நிறப்பொடி தூவியதைப் போன்று பூசணம் படிந்திருக்கும். தாக்கப்பட்ட பகுதிகள் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறமாகி கருகி விடுவதால், மகசூலும் குறையும். உ.ம். வெண்டை சாம்பல் நோய், திராட்சை அடிச்சாம்பல் நோய்

துரு (Rust)

நோய் தாக்கிய இலைகளின் மேற்பரப்பிலோ, அடிப்பரப்பிலோ முதலில் கரும்பழுப்பு அல்லது கருஞ்சிவப்பு நிறத்தில் நீள் வட்ட வடிவத்தில் தடித்த புள்ளிகள் தோன்றும். இப்புள்ளிகள் நாளடைவில் துருக்கூடுகளாக மாறி, உடைந்து, அவற்றிலிருந்து ஏராளமான பூசண வித்துக்கள் வெளிவரும். வித்துக்கள் இலைகளின் மேற்பரப்பில் படிந்திருப்பது, துருபிடித்தது போன்று சொரசொரப்பான தோற்றமளிக்கும். உ.ம். கோதுமை துருநோய், நிலக்கடலை துருநோய், காப்பி துருநோய்

வாடல் (Wilt)

இதற்கு திடீர் சாவு (Sudden death) என்று பொருள். தாக்கிய செடிகள் திடீரென்று வாடத் தொடங்கி, சில தினங்களில் முழுவதும் காய்ந்து மடிந்துவிடும். பூசணம் தண்டிலுள்ள சாற்றுக் குழாய்த் தொகுதிகளை அடைத்து விடுவதால், உணவுப் பொருட்களின் பரிமாற்றம் தடைபட்டு, செடிகள் காய்ந்து, மடிந்து விடுகின்றன. உ.ம். வாழை பனாமா வாடல் நோய், துவரை வாடல் நோய், பருத்தி வாடல் நோய்.

பாக்டீரியாக்களால் ஏற்படும் நோய் அறிகுறிகளைக் கண்டறிதல்

கரிதல் (Blight)

பாக்டீரியாவின் தாக்குதலால் பயிர்களின் இலைகளில் ஈரக்கசிவுடன் முதலில் சிறிய புள்ளிகள் தோன்றும். புள்ளிகள் விரைவில் விரிவடைந்து, தாக்கப்பட்ட பாகத்தின் பெரும் பகுதியைக் கரிய வைக்கிறது. நீர்க்கசிவு வெயிலில் உலரும்போது மினுமினுப்புடன் தோன்றும். உ.ம். நெல் பாக்டீரிய இலைக் கருகல் நோய்.

பிளவை (Canker)

இலைகள், கிளைகள், பழங்கள் போன்ற செடியின் பாகங்களில் சொரசொரப்பான வெளிவளர்ச்சியைக் கொண்ட புள்ளிகள் தோன்றும். பாக்டீரியாவின் தாக்குதலால் திசுக்கள் கரிந்து, மடிந்து வெளி வளர்ச்சியை தோற்றுவிக்கின்றது. உ.ம். எலுமிச்சை பிளவை நோய்

மென் அழுகல் (Soft rot)

நோய் அறிகுறி பெரும்பாலும் கிழங்குகள், பழங்கள், மென்மையான தண்டுகள் போன்ற சதைப்பிடிப்பான பாகங்களில் தோன்றும். காயங்கள், சிராய்ப்புகள் போன்றவற்றின் வழியாக பாக்டீரியா உட்சென்று நீர்க்கசிவுடன் கூடிய புள்ளிகளைத் தோற்றுவித்து, அழுகிய படைகளாக மாற்றுகின்றன. அப்பாகங்கள் நிறம் மாறி மென்மையாக துர்நாற்றத்துடன் காணப்படும். உ.ம். இஞ்சி மென் அழுகல் நோய்.

கழலைகளும், கொப்புளங்களும் (Tumours and galls)

தாக்கிய செடிகளின் பாகங்களில், பாக்டீரியா நச்சுப்பொருளை உருவாக்குவதால் திசுக்களில் அசாதரணமான திசுவறைப் பெருக்கமும், வளர்ச்சியும் உண்டாகும். இதனால் கழலைகள், கொப்புளங்கள் போன்ற ஒழுங்கற்ற வளர்ச்சிகள் தோன்றுகின்றன. உ.ம். தக்காளியின் தண்டுப்பாகத்தில் தோன்றும் கழலை நோய்.

நச்சுயிரிகளால் ஏற்படும் நோய் அறிகுறிகளைக் கண்டறிதல்

தேமல் (Mosaic)

பசுமையான இலைப்பரப்பில் ஆங்காங்கே இளம் பச்சை அல்லது வெளிர்பச்சை நிற ஒழுங்கற்ற திட்டுக்கள் தோன்றும். உம். மிளகாய், தக்காளி, மரவள்ளி, புகையிலை போன்ற பயிர்களைத் தாக்கும் தேமல் நோய்.

மஞ்சள் தேமல் (Yellow Mosaic)

பச்சைநிற இலைப்பரப்பில் மஞ்சள் நிறத்திட்டுக்கள் தோன்றும். உ.ம். அவரை, உளுந்து, மொச்சை போன்ற பயிர்களைத் தாக்கும் மஞ்சள் தேமல் நோய்.

நரம்பு வெளுத்தல் (Vein Clearing)

இலைகளிலுள்ள நடுநரம்பு மற்றும் கிளை நரம்புகளின், பச்சை நிறம் மாறி, மஞ்சளாகவோ அல்லது வெளிரியோ காணப்படும். ஆனால் நரம்புகளுக்கு இடையிலான பகுதிகள் பச்சை நிறத்தில் காணப்படும். உ.ம், வெண்டை நரம்பு வெளுத்தல் நோய்.

மலட்டுத் தன்மை (Sterility)

நோய் தாக்கிய செடியின் பூக்களிலுள்ள பாகங்கள் நன்கு வளராமல், கருவும் உண்டாகாமல், மலட்டுத்தன்மை பெற்றிருக்கும். பூ பூத்தாலும் காய் பிடிக்காமல் உதிர்ந்துவிடும். செடியின் நுனிப்பாகத்திலுள்ள இலைகள் சிறுத்தும், சுருங்கியும், நிறம் மாறியும் காணப்படும். உ.ம். துவரை மலட்டுத் தேமல் நோய்.

முடிக்கொத்து (Bunchy top)

நோய் தாக்கிய பயிரின் வளர்ச்சி குன்றி, இலைகள் சிறுத்து, செங்குத்தாக வளர்ந்து, தண்டின் தலைப்பாகத்தில் ஒரே குத்தாகக் காணப்படும். நரம்புகளுக்கு இடையே அடர் பச்சை நிறக்கோடுகள் தென்படும். தாக்கப்பட்ட பயிர் பூப்பது இல்லை. உ.ம். வாழை முடிக்கொத்து நோய்.

இலைச்சுருள் (Leaf Roll)

தாக்கப்பட்ட செடியின் இலைகள் மேல் நோக்கி வளைந்து, சுருண்டு காணப்படும். உ.ம். உருளைக்கிழங்கு மற்றும் புகையிலை இலைச்சுருள் நோய்.

இலைச்சுருக்கம் மற்றும் இலை நெளிவு (Leaf crinckle and Leaf curl)

நோய் தாக்கிய செடியிலுள்ள இலைகள் வளைந்தும், நெளிந்தும், சுருக்கங்களோடும் காணப்படும். உ.ம். பப்பாளி, புகையிலை, தக்காளி, உளுந்து போன்ற செடிகளில் தோன்றும் இலைச்சுருக்கம் மற்றும் இலை நெளிவு நோய்.

இலை மற்றும் செடியின் பாகங்களின் வடிவமாற்றங்கள் (Malformation and distortion)

தாக்கப்பட்ட செடியின் பாகங்களில் பலவிதமான வடிவ மாற்றங்கள் காணப்படும். இலைகள் தாக்கப்படும் போது, இலைப்பரப்பு குறைந்து வால் போன்று நீண்ட, குறுகிய இலைகள் தோன்றும். உ.ம். தக்காளி எலிவால் தோற்ற நோய்.

மைக்கோபிளாஸ்மாவால் ஏற்படும் நோய் அறிகுறிகளைக் கண்டறிதல்

சிற்றிலை நோய் (Little leaf)

நோய் தாக்கிய செடிகளின் தண்டுப்பாகம் மற்றும் இலைகள் குட்டையாகி, சிறுத்துவிடும். இலைகள் ஒரே இடத்திலிருந்து தோன்றியதுபோல் குத்தாகக் காட்சியளிக்கும். இது போன்ற செடிகளிலிருந்து பூக்களும், காய்களும் உண்டாவதில்லை. உ.ம். கத்திரி சிற்றிலை நோய்.

பச்சைப்பூ (Phyllody)

இந்நோய் பூ பாகத்தை மட்டும் தாக்கும். பூவின் பாகங்கள் நீண்டு இலைகளைப் போல் பசுமை நிறமாக மாறும். இவற்றிலிருந்து காய்கள் உண்டாவதில்லை. உ.ம். எள் பச்சைப் பூ நோய்.

புல்தண்டு (Grassy shoot)

நோய் தாக்கிய செடிகள் வளர்ச்சி குன்றி, குட்டையாக மற்றும் அடர்த்தியாகக் காணப்படும். இலைகள் சிறுத்து, பசுமை நிறம் இழந்து, கணுவிடைப்பகுதி குறையும். கணு மொட்டுக்கள் ஊக்குவிக்கப்பட்டு கிளைகள் தோன்றி, புதர் போன்ற தோற்றமளிக்கும். பூவின் பாகங்களும் பசுமை நிறமாகும். உம். கரும்பு புல் தண்டு நோய்.

ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மை