அங்கக வேளாண்மை முறையில் பயிர்ப்பாதுகாப்பு என்பது மண்வளம் காப்பதோடு மட்டுமல்லாது சிறந்த நோய் எதிர்ப்புத் திறனைப் பயிர்களுக்கு உண்டாக்குவதுமாகும். நோய்க்காரணிகள் மண்ணில் தங்கியோ அல்லது விதைகள், விதைக்கரணைகள் மூலமாகவோ அல்லது காற்று, மழைநீர் மூலமோ அல்லது வைரஸ் (நச்சுயிரி) நோய்கள் பூச்சிகளின் மூலமோ பரவுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த பல யுத்திகளைப் பயன்படுத்தி சிறந்த நோய்க்கட்டுப்பாட்டினை அடைந்திடலாம்.

மண் மூலம் பரவும் நோய்களின் கட்டுப்பாடு

வாடல் நோய், வேர் அழுகல் போன்ற நோய்களின் காரணிகளான(கிளாமிடோஸ்போர், ஸ்கிளிரோசியா) மண்ணில் பல வருடங்களுக்கு தங்கி நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டுள்ளன. மேல்சாம்பல் நோய், அடிச்சாம்பல் நோய் உண்டாக்கும்(கிளிஸ்டோஷீதிசியா) நோய் தாக்கப்பட்ட உதிர்ந்த இலைகளில் தங்கி மீண்டும் நோயை உண்டாக்கும்.

நன்மை பயக்கும் நுண்ணுயிர்களை உருவாக்கும் முறை

ஊட்டமேற்றிய தொழு உரம், தழை எரு, நன்கு மட்கிய கோழி உரம், கம்போஸ்ட், மண்புழு உரம் மண்ணில் இடுதல்.

சணப்பை, கொளுஞ்சி, தக்கைப்பூண்டு, கிளைரிசிடியா முதலியவற்றை வளர்த்து பூக்கும் முன் மண்ணில் உழுதல்.

கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் மேற்பரப்பில் உள்ள கிருமிகள் சூரிய வெப்பத்தால் செயலிழக்கின்றன.

மூடாக்கு அமைப்பதன் மூலம் நுண்ணுயிர்களுக்கு ஏற்ற சூழல் உருவாகிறது. மண்ணின் வெப்பநிலை அதிகமாகும் நேரங்களில் வாழையில் ‘எர்வினியா’ கிழங்கு அழுகல் நோய் அதிகமாகக் காணப்படும். மூடாக்கு அமைப்பதன் மூலம் களைகளின் எண்ணிக்கை குறைகிறது. இதனால் பயிர் இல்லாத நேரங்களில் நோய் காரணிகள் களைகளில் தங்குவது கட்டுப்படுத்தப்படுகிறது.

வேப்பம்புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு மற்றும் புங்கம் புண்ணாக்கு மண்ணில் இடுவதால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வாழை வாடல் நோய், கடலை வேரழுகல் நோய் , தென்னை வாடல் நோயை பெருமளவில் கட்டுப்படுத்தலாம்.

ஒரே பயிரைத் தொடர்ச்சியாகப் பயிரிடாமல் பயிர் சுழற்சி முறையைப் பயன்படுத்துவதால் நோய் தாக்கம் குறையும். எடுத்துக்காட்டாக முட்டைகோசில் வரும் கொண்டை அழுகல் நோய், கொடி வகைகளில் வரும் வாடல் நோய்கள், சாம்பல் நோய்கள், வேர் அழுகல் நோய்கள், கேரட், காலிபிளவர், தக்காளி, வெண்டை, கத்தரி, சோளம் மற்றும் நெல்லில் வரும் வேர்வகை நோய்களை கட்டுப்படுத்த மக்காச்சோளம் போன்ற தானியங்களை பயிர் சுழற்சி செய்து நோயைக் கட்டுப்படுத்தலாம்.

மண்ணில் அதிக நீர் தேங்கினால் தக்காளி, கத்தரி, மிளகாய், கொடிவகைகளில் ஏற்படும் நாற்றழுகல் நோய் அதிகரிக்கும். அதே போல் வெற்றிலை வாடல் நோய், மஞ்சள், இஞ்சி, கிழங்கு அழுகல் நோயை உண்டாக்கும் பித்தியம், பைடோப்தாரா போன்ற பூசணங்கள் மண்ணில் அதிக நீர் இருந்தால் அதிகப்படியாகக் காணப்படும். எனவே நீர் பாய்ச்சும் அளவு சமச்சீராக இருத்தல் வேண்டும். நீர் பாய்ச்சும் அளவு குறையும் போது மண்ணின் வெப்பநிலை அதிகமாகி, பாக்டீரியாக்கள் நோயை உண்டாக்கும் (எ.கா.) வாழை எர்வினியா கிழங்கு அழுகல் நோய்.

வாழையின் வாடல் நோயைக்கட்டுப்படுத்த வயலில் 6 மாதத்திற்கு நீரைத்தேக்கியோ அல்லது வாழைக்குப்பின் நெல் பயிரிடுவதன் மூலமோ வாடல் நோய் கிருமிகளை அழிக்கலாம்.

வயலில் நீரைத்தேக்கி வைப்பதால் நாற்றழுகல், வேர் அழுகல் நோய்கள் உருவாக்கும் பூசணங்களான பித்தியம், ரைசக்டோனியா, பைட்டோப்தாரா போன்றவற்றை நிலத்திலிருந்து அகற்றலாம்.

நிலத்தை பாலிதீன் தாள்களைக் கொண்டு மூடுவதன் மூலம் மண்ணின் வெப்பத்தை 40° செல்சியஸ் முதல் 50° செல்சியஸ் வரை உயர்த்த முடியும். இதனால் பூசணி, தர்பூசணி, முள்ளங்கி, சாமந்தி வாடல் நோய்களை வெகுவாகக் குறைக்கலாம்.

பச்சை நீல நிற தாள்களைக் கொண்டு நிலத்தை மூடும்பொழுது வெள்ளரி மேல் சாம்பல்நோய், அடிச்சாம்பல் நோய்க்காரணிகள் அழிக்கப்படுகின்றன.

தக்காளியில் ஏற்படும் பாக்டீரியா நோயைக்கட்டுப்படுத்த பாலித்தீன் தாள்களைக்கொண்டு மண்ணை சூரியஒளி வெப்பத்திற்கு உட்படுத்தும் போதும் நோய் தாக்கப்படுவது குறைகிறது. தவிர நன்மை பயக்கும் சூடோமோனாஸ், பேசில்லஸ் போன்ற நுண்ணுயிர்கள் தாக்கப்படுவதில்லை. எனவே இவை மறைமுகமாக நோய் எதிர்ப்புத்திறனை உருவாக்குகின்றன.

மண்ணில் பிரதிபலிக்கும் மூடாக்குகளை அமைப்பதால் வைரஸ் நோய்களைப் பரப்பும் அசுவினிகளுக்கு அவை எதிர்மறையான விளைவுகளை உருவாக்குகின்றன.

மஞ்சள் நிற ஒட்டும் தன்மையுடைய தாள்களை வயலில் வைப்பதன் மூலம் தக்காளி இலைசுருள் நோய், வெள்ளரி தேமல் நோய், உருளைக்கிழங்கு நச்சுயிரி நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

வெள்ளை நிறத்தில் உள்ள பாலித்தீன் மூடாக்குகள் தக்காளி, வெள்ளரி, தர்பூசணி, மிளகாய் வயல்களில் அமைத்தால் நச்சுயிரி நோய்கள் குறைக்கப்படுகின்றன.

வெள்ளரி மஞ்சள் தேமல் நோயைக்கட்டுப்படுத்த, நெல் வைக்கோலை மூடாக்காக பயன்படுத்தும் பொழுது வெள்ளை ஈக்கள் கவரப்பட்டு அதிக வெப்பத்தால் அழிக்கப்படுகிறது.

நன்கு மக்கிய தொழு உரத்துடன் டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் அல்லது பேசில்லஸ் போன்ற நன்மை பயக்கும் எதிர் உயிரிகளை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் மண்ணில் இடுவதால் சிறந்த நோய் மேலாண்மை கிடைக்கிறது

விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துதல்

நோய் தாக்கப்படாத வயல்களிலிருந்து விதைகள் கரணைகள், விதைக்கிழங்குகள் முதலியவற்றைத் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக கிழங்குகளின் மூலம் பரவும் நச்சுயிரி நோய்கள் விதை மூலம் பரவும் கரிப்பூட்டை, இலைப்புள்ளி, இலைக்கருகல் நோய்கள் நச்சுயிரி நோய்கள் விதையின் மேற்புறத்தில் தங்கிப்பரவும் பாக்டீரியா நோய்களின் கட்டுப்பாட்டை எளிதில் பெறலாம்.

கோதுமை விதைகளை நான்கு மணி நேரம் குளிர் நீரில் ஊறவைத்து, மதிய வேளையில் சூரிய ஒளியில் நான்கு மணி நேரம் காய வைக்கும் பொழுது விதையிலுள்ள கரிப்பூட்டைக் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

தக்காளி விதைகளை நொதித்தலுக்கு உட்படுத்தும் பொழுது, வெளிவரும் வாயுக்களை தக்காளியின் மேற்பரப்பில் உள்ள புகையிலைத் தேமல் நச்சுயிரியை அழிக்கின்றன.

தக்காளி புள்ளி வாடல் நச்சுயிரி நோயானது நட்ட ஆறு வாரங்கள் வரை நோய் தாக்கிய செடிகளை அகற்றுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

வைரஸ் தாக்கிய செடிகளை வயலில் இருந்து அப்புறப்படுத்தும் பொழுது, நச்சுயிரி நோய்கள் மேலும் பரவாமல் பாதுகாக்கப்படுகிறது. வாழை முடிக்கொத்து நோய்.

சில விவசாயிகள் கால்நடைகளின் சிறுநீரில் விதைகளை ஊறவைத்து நடுவதால் முளைப்புத்திறன் அதிகரிப்பதாகக் கூறுகின்றனர்.

கம்பு, சோளப்பயிர்களில் ஏற்படும் தேன் ஒழுகல் நோயைக் கட்டுப்படுத்த, செப்டம்பர் அக்டோபர் மாதங்களில்(அதிக மழை வரும் நேரங்களில்) பூக்காத படி விதைத்தால் நோய் கட்டுப்பாடு கிடைக்கும்.

வரப்புப் பயிராக கம்பு, சோளம் போன்றவற்றை பப்பாளி, உளுந்து, பாசிப்பயிறு, நிலக்கடலையை சுற்றிலும் பயிரிடும் பொழுது மஞ்சள் தேமல், பப்பாளி

வளையபுள்ளி, வைரஸ் நச்சுயிரி, நிலக்கடலை மொட்டுக்கருகல் நோய் கட்டுப்பாடு கிடைக்கிறது.

இலை வழிகளின் நோய் கட்டுப்பாடு

வேப்பங்கொட்டை சாறு 5 சதம் தெளிப்பதால் இலைப்புள்ளி, இலைக்கருகல் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

110 மி.லி. மாட்டு சிறுநீர், 5 கிராம் பெருங்காயப்பொடி, 11 கிராம் மஞ்சள் தூள், 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து 12 மணி நேரம் பாதுகாப்பாக வைக்க வேண்டும். பின்னர் நாற்றுக்களின் வேர்களை நனைத்து நடவு செய்யும் பொழுது நோய் தாக்கம் குறைகிறது.

பூண்டு – மிளகாய் கரைசல்(11 சதம்) தெளிப்பதன் மூலம் பீன்ஸ் பட்டாணியில் ஏற்படும் அசுவினியைக் கட்டுப்படுத்துவதால் நச்சுயிரி தாக்கம் குறைகிறது.

பஞசகவ்யா 3 சதம் 11 நாட்கள் இடைவெளியில் தெளிப்பதால் இலைப்புள்ளி மேல் சாம்பல் நோய் தாக்கம் குறைகிறது.

உயிரியல் நோய் எதிர்ப்பு காரணிகள்

உயிரியல் முறையில் நோய் கட்டுப்பாட்டு காரணிகளான டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் போன்றவை அங்கக வேளாண்மையின் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன.

சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் உபயோகிக்கும் முறை

விதை நேர்த்தி : 1 கிலோ விதைக்கு 11 கிராம் என்ற அளவில்.

நாற்று நனைத்தல்: 2.5 கிலோ/ எக்டருக்கு தேவையான நாற்று

வயலில் இடுதல்: ஒரு எக்டருக்கு 2.5 சதம் 2.5 கிலோ + 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு

தெளிப்பு முறை: 0.2 சதம் (2 கிராம் சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்கவும்)

டிரைகோடெர்மா விரிடி

விதை நேர்த்தி: 4 கிராம் டிரைகோடெர்மா விரிடியை 1 கிலோ விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதை நேர்த்தியால் கட்டுப்படும் நோய்கள்: பயிர் வகை பயிர்கள், நிலக்கடலை, எள், சூரியகாந்தியில் உண்டாகும் வேரழுகல் மற்றும் வாடாமல் நோய்கள், காய்கறி பயிர்களில் ஏற்படும் நாற்றழுகல் மற்றும் வேரழுகல்

மண்ணில் இடுதல்: 2.5 கிலோ சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் உடன் 50 கிலோ மக்கிய குப்பை அல்லது எருவுடன் கலந்து மண்ணில் இடுவதால் மஞ்சள் கிழங்கு அழுகல் நோய் போன்ற மண்ணின் மூலம் பரவும் நோய்களின் கட்டுப்பாடு கிடைக்கிறது.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்