கன்றுகளுக்கு சீம்பால் அளித்தல் கன்று ஈன்றவுடன் மாட்டின் மடியிலிருந்து சுரக்கும் முதல் பால் சீம்பாலாகும். சீம்பாலில் காமாகுளோபுலின்கள் எனப்படும் நோய் எதிர்ப்பு புரதங்கள் அதிக அளவு உள்ளன. இவை மாட்டினை ஏற்கெனவே பாதித்த நோய்க்கிருமிகளுக்கு எதிராக மாட்டின் உடலில் உருவாகி பால் வழியாக கன்றுகளுக்கு சென்று கன்றுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை அளிக்கின்றன. சீம்பாலில் சாதாரண பாலை விட 7 மடங்கு புரதச்சத்து அதிகமாகவும், மொத்த திட சத்துகள் இரண்டு மடங்கு அதிகமாகவும் உள்ளது. எனவே சீம்பால் கன்றின் தொடக்கக் கால வயதில் புரதச்சத்து மற்றும் இதர சத்துகளையும் அளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும் முக்கிய காரணிகளான தாது உப்புகளும், வைட்டமின் ‘ஏ’ சத்தும் சீம்பாலில் அதிக அளவு உள்ளது. இவற்றை சீம்பால் மூலமாக கன்று உட்கொள்ளும் போது கன்றின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. சீம்பாலிலுள்ள நோய் எதிர்ப்பு புரதங்களை சீம்பால் வழியாக கன்றுகள் எடுத்துக்கொள்ளும்போது, கன்றுகள் அவைகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியினை பெறுகின்றன. சீம்பால் ஒரு மலமிளக்கியாக செயல்பட்டு முதன் முதலில் கன்றின் குடலிலிருந்து சாணத்தினை வெளியேற்றவும் உதவுகிறது. கன்று பிறந்து 15-30 நிமிடங்களுக்குள்ளாக கன்றுகளுக்கு முதல் தவணை சீம்பாலை அளித்து விடுவது மிகவும் நல்லது. இரண்டாம் தவணையாக கன்று பிறந்த 10-12 மணி நேரத்திற்குள் சீம்பாலை அளிக்கவேண்டும். கன்று பிறந்து அரை மணி நேரம் முதல் 12 மணி நேரத்திற்குள் கன்றின் உடல் எடையில் 5-8% சீம்பாலை அளிக்கவேண்டும். பிறகு 2, 3ம் நாள் வயதில் அதன் உடல் எடையில் 10% சீம்பாலைக் கொடுக்கவேண்டும். மாட்டிலிருந்து கறக்கப்படும் அதிகப்படியான சீம்பாலை குளிர்பதனப்பெட்டியில் சேமித்து தாயற்ற கன்றுகளுக்கும் கொடுக்கலாம் சீம்பாலிலுள்ள சத்துகள் உட்பொருட்கள் பசு மாடுகளின் சீம்பால் எருமை மாடுகளின் சீம்பால் பால் மொத்த திடச்சத்துகள் 28.30 31.0 12.86 சாம்பல் 1.58 0.9 0.72 கொழுப்புச்சத்து 0.15-1.2 4.0 4.0 லேக்டோஸ் 2.5 2.2 4.8 கேசின் 4.76 7.7 2.8 ஆல்புமின் 1.5 3.6 0.54 குளோபுலின் 15.06 12.5 - மொத்த புரதம் 21.32 23.8 3.34 ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்