கட்டிடங்களின் தரை ஒரு முக்கியமான அமைப்பாகும். கட்டிடத்தின் தரைப்பகுதியானது கால்நடைகள் நடக்கவும், படுக்கவும் இதர வேலைகளைச் செய்யவும் பயன்படுகிறது

எனவே கால்நடைக் கொட்டகைகளின் தரையானது, மேற்கூறிய வேலைகளைச் செய்ய ஏற்றதாக இருக்கவேண்டும்

கால்நடைக் கொட்டகைகளின் தரை கால்நடைகளின் கடினமான குளம்பு பகுதியின் அழுத்தத்தைத் தாங்குவதற்கு ஏற்றவாறும், கட்டிடத்தின் அதிக எடை வாய்ந்த கூரையைத் தாங்குமாறும் அமைக்கப்பட வேண்டும். தவிரவும் கால்நடைக் கொட்டகைகளின் தரை அமைக்க ஆகும் செலவு குறைவாகவும் இருக்க வேண்டும்

கால்நடைக் கொட்டகைகளின் தரை கால்நடைகளுக்கு சுகாதாரமான முறையில் தீவனம் அளிப்பதற்கும், கால்நடைகளின் திட மற்றும் திரவக் கழிவுகளை எளிதாக சுத்தம் செய்வதற்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்பட வேண்டும்

கால்நடைக் கொட்டகைகளின் தரை கடினமான மற்றும் திடமான அஸ்திவாரத்தின் மீது அமைக்கப்பட வேண்டும். தீவனத் தொட்டியிலிருந்து, சாணம் மற்றும் திரவக்கழிவுகள் செல்லும் கால்வாய் வரை 1/60 என்ற அளவில் சாய்வாக அமைக்கப்பட வேண்டும்

கால்நடைக் கொட்டகைகளின் தரை வழுக்கும் தன்மை அற்றதாகவும் இருக்க வேண்டும்

தரை சொரசொரப்பாகவும், கோடுகள் அமைக்கப்பட்டும் இருக்க வேண்டும்

கால்நடைக் கொட்டகைகளில் தரை அமைக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள்

சிமெண்ட் கான்கிரீட்

விட்ரிபைடு கற்கள்

கற்கள்

செங்கற்கள்

மணல்

i) சிமெண்ட் கான்கிரீட்

கால்நடைப் பண்ணைகளில் சிமெண்ட் கான்கிரீட்டிலான தரை பொதுவாக அமைக்கப்படுகிறது

நன்றாக அமைக்கப்பட்டால் இவ்வகை தரை அமைப்பு நீண்ட நாட்களுக்கு தாங்கும் தன்மையுடையது

வெப்ப மண்டலப் பிரதேசங்களில் இந்த தரை அமைப்பு கால்நடைகளுக்குத் தேவையான குளிர்ந்த சூழ்நிலையினை உருவாக்குகிறது

விபத்தினைத் தவிர்க்க இந்த தரை அமைப்பு சொர சொரப்பாகவும், கோடுகளுடனும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்

ii) செங்கற்கள்

சில சமயங்களில் செங்கற்கள், தரை அமைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன

ஆனால் செங்கற்கள் தரை அமைக்க ஏற்றவை அல்ல

இவை தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு, எளிதில் உடைந்து விடும் தன்மையுடையவை

இவற்றின் விளிம்புகள் நெருக்கமாகப் பொருத்தப்பட்டு, கற்களுக்கு இடையில் தரமான சிமெண்ட் பூசப்பட்டிருக்கும்

iii) விட்ரிபைடு கற்கள்

இந்த வகை தரை அமைப்பு, கடினமான, தண்ணீரை உறிஞ்சாத, மேற்பரப்பில் கோடுகளுடன் கூடிய கற்களால் ஆன தரை அமைப்பாகும்

ஈரமற்ற, நீண்ட நாட்களுக்குத் தாங்கும் தன்மையுடைய இவ்வகை தரை அமைப்புகள் கால்நடைப் பண்ணைகளுக்கு ஏற்றவை

இந்த கற்கள் மணல் படுகைகளின் மீது அமைக்கப்பட்டிருக்கும்

கற்களுக்கு இடையிலுள்ள இடைவெளி, சிமெண்ட் பூச்சினால் இணைக்கப்பட்டிருக்கும்

iv) கற்கள்

கிரானைட் கற்கள் எளிதில் கிடைக்கும் பட்சத்தில், மாட்டுப்பண்ணைகளில் தரையினை அமைக்கப் பயன்படுகின்றன

இந்த கற்களின் மேற்புறம் சொரசொரப்பாக்கப்பட்டு மணல் படுகையின் மீது அமைக்கப்படுகின்றன

இந்த வகை தரை அமைப்பு, நீண்ட நாட்களுக்கு உழைக்கக்கூடியது, மேலும் விலை மலிவானது

v) மணல்

நல்ல நைசான மணல், கால்நடைப் பண்ணைகளில் தரைகளை அமைக்கப் பயன்படுத்தப்படும் மலிவான பொருளாகும்

மணல் தரை தண்ணீரை எளிதில் உறிஞ்சிக்கொண்டு, நீண்ட நாட்களுக்குத் தாங்குவதில்லை

அடிக்கடி இந்த தரை அமைப்பினை மாற்றுவதுடன், பராமரிப்பும் இவ்வகை தரை அமைப்பிற்குத் தேவைப்படும்

நோய் தாக்குதல்களின்போது இந்த தரை அமைப்பில் கிருமி நீக்கம் செய்ய முடியாது

மணல் தரை மீது சுண்ணாம்புக் கரைசல் அல்லது சாணக்கரைசலை தெளிப்பதால் இவ்வகை தரை அமைப்பினை பராமரிக்க முடியும்

கால்நடைக் கொட்டகைகளின் தரை வடிவமைப்பு

அ. திடமான தரை

திடமான தரை அமைப்பானது சிமெண்ட் கான்கிரீட், செங்கற்கள், கற்கள், மணல், ஜல்லி போன்றவைகளால் ஆன கடினமான தரை அமைப்பாகும்

திடமான தரை அமைப்பானது தண்ணீர் வடிவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்

மாட்டுக் கொட்டகையில், திரவக் கழிவுகள் வெளியேறுவதற்கு ஏற்ற வகையில் கழிவு நீர் வெளியேறும் கால்வாய் 1/40 முதல் 1/60 என்ற அளவிற்கு சாய்வாக இருக்குமாறு அமைக்க வேண்டும்

கொட்டகையில் தண்ணீர் தேங்குவதை தவிர்ப்பதற்காக, கொட்டகையின் தரை ஈரப்பதத்தினை உறிஞ்சாத வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்

இம்மாதிரியான தரை அமைப்பில் முறையாக கொட்டகையினை சுத்தம் செய்வதும், கிருமி நாசினிகளைப் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்ய வேண்டியதும் அவசியமாகும்.

ஆ. ஆழ்கூள தரை

இந்த வகை தரை அமைப்பில், மாடுகள் படுப்பதற்கு ஏற்ற வகையில் ஆழ்கூளம் அடுக்குகளாக போடப்பட்டிருக்கும்

வைக்கோல், மரத்தூள்கள், நிலக்கடலைத் தோல் பொட்டு, காய்ந்த இலைகள் ஆழ்கூளப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன

இந்த பொருட்களை 4-6 அங்குல உயரத்திற்கு தரையில் பரப்பி, ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை ஆழ்கூளமாகப் பயன்படுத்தலாம்

கால்நடைகளின் சாணம் இந்த ஆழ்கூளப் பொருட்களுடன் கலந்து நன்றாக மக்கி விடும்

இது தவிர காய்ந்த ஆழ்கூளப் பொருட்கள் சாணத்திலிருக்கும் ஈரத்தன்மையினை உறிஞ்சிவிடுவதால், நுண்ணுயிரிகளின் செயல்பாடு கட்டுப்படுத்தப்படுகிறது

ஆழ்கூளத்தில் அதிகப்படியான நுண்ணுயிரிகளின் செயல்பாட்டினை ஆழ்கூளத்தில் சுண்ணாம்பு தூளைத் தெளித்து கட்டுப்படுத்தலாம்

கேள்வி பதில்

1. கறவை மாடுகளுக்கான கொட்டகையில் ஒரு மாட்டிற்கு தேவைப்படும் தரையளவு எவ்வளவு?

ஒரு மாட்டிற்க்கு சுமார் 3.5 மீ2 இடம் தேவைப்படும்.

2. திறந்த வெளி கொட்டகை அமைப்புகளில் ஒரு கறவைமாட்டிற்க்கு தேவைப்படும் தரையளவு எவ்வளவு?

ஒரு மாட்டிற்க்கு சுமார் 7.0 மீ2 இடம் தேவைப்படும்

3. எருமை மாடுகளுக்கான கொட்டகையில் ஒரு மாட்டிற்க்கு தேவைப்படும் தரையளவு எவ்வளவு?

ஒரு மாட்டிற்க்கு சுமார் 4.0 மீ2 இடம் தேவைப்படும்.

4. திறந்தவெளி கொட்டகை அமைப்புகளில் ஒரு எருமை மாட்டிற்கு தேவைப்படும் தரையளவு எவ்வளவு?

ஒரு மாட்டிற்கு சுமார் 8.0 மீ2 இடம் தேவைப்படும்.

5. கறவைமாட்டு கொட்டகை அமைக்க எவ்வகை தரைகள் தரமானவகையாகும்?

பொதுவாக, சிமெண்ட் கான்கீரிட் தரைகள் உகந்தவை

ஆதாரம்: தமிழ்நாடு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்