இருபதாம் நூற்றாண்டின் முந்தைய காலத்தில், கால்நடைக் கழிவுகளின் உரங்கள், மண்வள மேம்பாட்டிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் முக்கிய பங்கு வகித்தன. இரசாயன அறிமுகத்திற்கு வளர்ச்சிக்கு பிறகு, கால்நடைக் கழிவு உரங்கள், இயற்கை எருக்கள் போன்றவற்றின் பயன்பாடு குறைந்து வருகின்றது. இரசாயன உரங்கள் மண்ணின் வளத்தை குறைப்பதோடு, சுற்றுசூழலையும் பாதிக்கின்றன.

கோழிக் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் உரங்கள் நிலத்திலிடும் போது மண்ணின் வளத்தை மேம்படுத்துவதோடு, சுற்றுச்சூழல் மாசடைவதையும் தடுக்கின்றன.

கோழிக் கழிவுகள்

கோழிப் பண்ணைத் தொழிலின் முக்கிய பிரச்சனை அதன் கழிவுகளே ஆகும். இந்தியாவில் ஒரு ஆண்டிற்கு 4 மில்லியன் டன்கள் கோழிக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. உலர்ந்த, ஈரமான கோழிக் கழிவுகள், படுக்கைக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள், போன்றவை எரு தயாரிப்பிற்கு பயன் படுத்தப்படுகின்றன. கோழியின் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் எருவில் பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அதிகளவில் உள்ளன.

மற்ற எருக்களைக் காட்டிலும், கோழி எருவில் நைட்ரஜன், பாஸ் பரஸ், கால்சியம் ஆகியவற்றின் அளவு, அதிகமாக இருக்கின்றது. கோழியின் புதிய எச்சத்தில் 80 சதவீதத்திற்கும் மேலான அளவில் யூரிக் அமிலம், யூரியாவும் கனிம பாஸ்பரஸ் 0.3 முதல் 2.4 சதவீதமும், அங்கக பாஸ்பரஸ் 0.1 முதல் 1 சதவீதமும் காணப்படுகின்றது. மெக்னீசியம், நுண் உரங்கள் போதுமான அளவு உள்ளன.

வேளாண்மையில் கோழிக்கழிவு பயன்பாடு

கோழிக்கழிவிலிருந்து உருவாக்கப்படும் எரு மண்ணின் வளத்தை மேம்படுத்துகின்றது. கோழிக் கழிவிலிருந்து எரு உருவாக்குவது கழிவுகளினால் ஏற்படும் பிரச்சைனையைக் குறைப்பதோடு மண்ணின் வேதியியல், இயற்பியல் தன்மையையும் மேம்படுத்தப்படுகின்றது.

கோழி எருவில் அதிகளவு பயிருக்கு தேவையான ஊட்டசத்துகள் இருப்பதால் பயிரின் விளைச்சலைத் கூட்டுகின்றது. கோழி கழிவுகளின் எருவை பயிருக்கு பயன்படத்துவதால், மண்ணின் கரிமசத்து, நீர் உறிஞ்சும் தன்மை, ஆக்ஸிஜன் பரவுதல், மண்ணின் நிலையான தன்மை (Stability) ஆகியவற்றை உயர்த்துகின்றது. இந்த எருவில் கால்சியத்தின் அளவு அதிகமிருப்பதால் உவர் தன்மையுள்ள களர்நிலங்களை சீர்செய்ய பயன்படுத்தப்படுகின்றது.

கோழிக் கழிவகளினால் சுற்று சூழலுக்கு ஏற்படும் விளைவுகள்

கோழிப்பண்ணையிலிருந்து வெளியேறும் கழிவுகளைச் சரியான விதத்தில் பயன்படுத்தாவிட்டால் இந்தக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு அதிகளவு தீங்கு விளைவிக்கின்றன.

நைட்ரஜனின் வாயுக்களான அம்மோனியா, அதிகளவு சுற்றுச்சூழலைப்பாதிக்கின்றது.

அதிகளவு நைட்ரஜன் இருப்பதால், நைட்ரேட் எளிதில் நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றது.

தொடர்ந்து கோழிக்கழிவின் உரங்களை நிலத்தில் பயன்படுத்துவதால் கடினமான தனிமங்கள், தீங்கு விளைவிக்கக்கூடிய காரணிகள் போன்றவை நிலம், நீர் நிலைகளை மாசுபடுத்த வழிவகுக்கின்றன.

கோழிக் கழிவில் நோய்களைப் பரப்பகூடிய காரணிகள் அதிகளவு இருப்பதால், குடிநீர், மனித நலத்திற்கும் தீங்கு விளைவிக்கின்றன.

கோழிக்கழிவில் அதிகளவு நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்றவை இருப்பதால், இவைகளால் நிலம், நீர் நிலைகள் மாசுபடுவதற்கு வாய்ப்புள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி கோழிக் கழிவுகளைப் பயன்படுத்தும் முறை

கோழியின் புதிய கழிவுகளைப் பயன்படுத்துவது மிக கடினமான ஒன்று. ஏனெனில் அதிகளவு ஈரப்பதம் இருப்பதால் துர்நாற்றம் வீசக்கூடியதாக இருக்கும். அது மட்டுமல்லாது கோழிக் கழிவுகளைச் சேமிக்கும் போதும், உலர்த்தும் போதும், கையாளும் போதும், நிலத்தில் பயன்படுத்தும் போதும் அதிகளவு நைட்ரஜன் வீணாகின்றது. இதனால் பாதுகாப்பான முறையில், இந்த கழிவிலுள்ள ஊட்டச்சத்துகளை நிலத்திற்கு பயன்படுத்த ஏற்ற முறை உரமாக்குதலே ஆகும்.

கோழிக்கழிவும் - நன்மைகள்

கோழிக் கழிவுகளை உரமாக்குவதால், கழிவுகளின் அளவு குறைவதோடு, கையாளுவதற்கும் நிலத்தில் பயன்படுத்துவதற்கும் ஏதுவாக உள்ளது.

எருவாக்கும் முறையினால் கழிவிலுள்ள நோய்களை பரப்பும் காரணிகள், நிலம், நீர் நிலைகளைப் பாதிக்கக் கூடிய காரணிகளும் அழிக்கப்படுகின்றன.

கோழிக் கழிவுகளோடு, பாஸ்பேட், கந்தகம் ஆகியவற்றை சேர்த்து எருவாக்கும் போது ஊட்டச்சத்து நிறைந்த எரு கிடைக்கின்றது. கந்தகம் எருவின் அமில காரத்தன்மையை குறைப்பதால் அம்மோனியா வெளியேறுவது தடுக்கப்படுகின்றது.

ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மை