திரமி - நொதித்த தாவரசாறு தயாரிப்பு

நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை சரி படுத்துவதற்காக திரமி – நொதித்த தாவரசாறு (TFPE)பயன்படுகிறது.

தேவையானபொருட்கள்

(அ) புளி அல்லது துத்தநாகம்

(ஆ) அவரை, செம்பருத்தி, அல்லது வல்லாரை (செம்பு)

(இ) கறிவேப்பிலை, முருங்கை இலை, அல்லது பிற கீரை இலைகள் (இரும்பு)

(ஈ) எருக்கு (போரான்)

(உ)அனைத்து வகையான மலர்கள் (மாலிப்டினம்)

(ஊ) துத்தி (கால்சியம்)

(எ) எள் அல்லது கடுகு தாவரங்கள் (கந்தகம்)

(ஏ) வெண்டை இலை (அயோடின்)

(ஐ) லாண்டானா காமரா, கசுரினா, அல்லது மூங்கில் (சிலிக்கா)

(ஒ) நெய்வேலி காட்டாமணக்கு (அரைக்கப்பட்ட நெய்வேலி காட்டாமணி) (பாதரசம்), (கே) கிலைரிசிடா (நைட்ரஜன்)

துளசி, நொச்சி, வேம்பு, கற்றாழை (பூஞ்சை, பாக்டீரியா, மற்றும் மேல் சாம்பல் நோய் எதிர்ப்பு உருவாக்க)

சித்த மற்றும் ஆயுர்வேத அமைப்புகள் அடிப்படையில் மேலே உள்ள தாவரங்கள் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தயாரிப்பு

மேலே உள்ள பட்டியலில்இருந்து 5 கிலோ இலைகள் மற்றும் தாவரங்கள் சேகரிக்க வேண்டும்.

பயிர்கள் நுண்ணூட்டக் குறைபாடு பொறுத்து தாவரங்களை தேர்ந்தெடுக்கவும்.

சிறிய துண்டுகளாக நறுக்கி கசக்க வேண்டும்.

பத்து லிட்டர் நீரில் 250 கிராம் வெல்லம் சேர்க்க வேண்டும்.

250-300 மில்லி திறன் நுண்ணுயிர் சேர்க்கவும்.

7-10 நாட்கள் கலவையை நொதிக்கவிட வேண்டும். இது பத்து லிட்டர் கரைசல் வழங்குகிறது.

பயன்பாடு

90 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

தெளிப்பு : 5-10% .

நீர்ப்பாசனம் : ஏக்கருக்கு 10-20 லிட்டர்

நன்மைகள்

நுண்ணூட்டச்சத்து குறைபாடு சரி செய்வதற்கு

பூச்சிவிரட்டியாக செயல்படுகிறது

எதிர்ப்பு தூண்டுகிறது.

நீட்டிக்கப்பட்ட திரமி தயாரிப்பு

நீட்டிக்கப்பட்ட திரமி (ET) தேவையான பொருட்கள்

(அ) குளோரின் இல்லாத 20 லிட்டர் குடிநீர்

(ஆ) 1 கிலோ வெல்லம்,

(இ) 1 லிட்டர் திரமி கரைசல்.

தயாரிப்பு

ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் இந்த கலவையை கலக்க வேண்டும் மற்றும் இதனை கொண்டு இருபது ஒரு லிட்டர் பிளாஸ்டிக் ஜாடிகளை நிரப்ப வேண்டும்.

பாட்டில் மூடிகளை இறுக்கமாக மூட வேண்டும். பல்வேறு நுண்ணுயிர்கள் பெருக்கத்திற்காக 7-10 நாட்கள் வைத்து இருக்க வேண்டும்.

ஒவ்வொரு பாட்டிலிலும் மீத்தேன் வாயு உருவாகி இருக்கும்.

முதல் அல்லது இரண்டாவது நாளில் தொப்பியை திறந்து வாயுவை வெளியேற்றி மீண்டும் இறுக்கமாக மூடவும்.

இதை அடிக்கடி தேவையான பொழுது செய்யவும்.

ஒவ்வொரு திறக்கப்படாத பாட்டில்களில் உள்ளடக்கங்களை 3-4 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

பயன்பாடு

5-10 லிட்டர் நுண்ணுயிர் கரைசலை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

இது வளர்ச்சி மற்றும் பூச்சிகள் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கிறது. 100 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் என்ற அளவில் பயிர் எச்சங்கள் சிதைவிற்கு பயன்படுத்தப்படுகிறது. ஏக்கருக்கு 3-6 லிட்டர் என்ற விகிதத்தில் பாசன நீரிலும் பயன்படுத்தப்படுதலாம்.

திரமி சிகிச்சை மாட்டு சிறுநீர் (TTCU)

தேவையான பொருட்கள்

(அ) 5 லிட்டர் மாட்டு சிறுநீர்

(ஆ) 250 கிராம் வெல்லம்

(இ) 250 மில்லி திறன் நுண்ணுயிரி

தயாரிப்பு

அனைத்தையும் கலந்து, 7-10 நாட்களுக்கு நொதிக்க விடவும்.

பயன்பாடு

30 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

தெளித்தல்

ஒரு லிட்டர் நீரில் 3-5 மில்லி கலக்கவும்.

பாசன நீரில் 20-30 லிட்டர் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தலாம்.

இது பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்துகிறது.

ஆர்கியபாக்டீரியல் கரைசல் தயாரிப்பு

தாவரங்களுக்கு அருகே சாணத்தை மட்டும் இடுவதால் எந்த பயனும் இல்லை. இந்த பணியை துல்லியமாக முன்னெடுக்க நுண்ணுயிரிகள் உள்ளன. ஆர்கியபாக்டீரியா ஒரு சிறந்த நுண்ணுயிரிகளாகும். சரியான முறையில் இந்த நுண்ணுயிர்களை பயன்படுத்தினால் நல்ல பலன்களை பெற முடியும். ரசாயன உரங்கள் பயன்படுத்த வேண்டியதில்லை.

தேவையான பொருட்கள்

20 கிலோ சாணம்

200 லிட்டர் தண்ணீர்

3 கிலோ வெல்லம்

100 கிராம் கடுக்காய் தூள்

10 கிராம் அதிமதுரம்

தயாரிக்கும் முறை

ஒரு கொள்கலனில் சாணம் மற்றும் வெல்லத்தை தண்ணீருடன் கலக்க வேண்டும்.

கடுக்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். 250 மில்லி தண்ணீரில் அதிமதுரம் தூள் கொதிக்க விட்டுப் பின்னர் குளிர்விக்க வேண்டும்.

இந்த கரைசலை மேலே உள்ள கரைசலுடன் சேர்க்கவும். கொள்கலனில் மீதமுள்ள பகுதியை தண்ணீரை நிரப்பி காற்றுப் புகாதவாறு மூட வேண்டும்.

மீத்தேன் வாயு கொள்கலன் உள்ளே உருவாகி இருக்கும். ஒருசில முறை மூடியைத் திறந்து காற்றை வெளியே வருமாறு செய்யவும். கரைசல் பத்து நாட்களில் தயாராக இருக்கும்.

கரைசல் பழுப்பு நிறமாக மற்றும் ஒரு இனிமையான மணம் கொண்டதாக இருக்கும்.

தாவர வளர்ச்சி மேம்படும். ஆர்கியபாக்டீரியா அதே தாவரங்களால் நேரடியாக உறிஞ்சப்படுகிறது. பிற நுண்ணுயிரிகள் கூட இதை உட்கொள்கின்றன. நாம் இதனை நீல பச்சை பாசி வளர்ப்புக்கு பயன்படுத்த முடியும். இலை பரப்பு 15-20% அதிகரித்து காணப்பட்டது.

பயன்பாடு

ஒரு லிட்டர் கரைசலை பத்து லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம். அல்லது, பாசன நீருடன் பயன்படுத்த, இந்த கரைசலை ஏக்கருக்கு 200-300 லிட்டர் என்ற அளவில் பின்வரும் எதாவது ஒரு கரைசலுடன் கலந்து தெளிக்கலாம்: (அ) 30 முதல் 50 லிட்டர் செறிவூட்டப்பட்ட அமுதம் கரைசல், (ஆ) 5-20 லிட்டர் பஞ்சகாவ்யா, (இ) 5-10 லிட்டர் இளநீர்-மோர் / அரப்பு-மோர் கரைசல், (ஈ) 3 லிட்டர் மீன் அமிலம். இந்த நிலையில் நிலவும் நோய்களைக் கட்டுப்படுத்த பின்வரும் நுண்ணுயிரிகளைக் கலக்கலாம்.

ரைஸோஸ்பியரை மற்றும் புஸ்ஸாரியம் வாடல் நோய்களை கட்டுப்படுத்தும்.

வேர் முடிச்சு நூற்புழுக்கள் பசிலோமைசிஸ் லில்லாசினஸ் கொண்டு கட்டுப்படுத்தலாம்.

வேர் புழுக்களை கட்டுப்படுத்த பியூவீரியா பிராங்னியாரிட்டி மற்றும் மடர்ஹிசியம் பயன்படுத்தலாம். .

குறிப்பு

ஆர்கியபாக்டீரியல் கரைசல் பயன்படுத்தி நுண்ணுயிர்களை அதிகரிக்கலாம் மற்றும் இதனை பாசன நேரத்தில் கலந்து அளிக்க முடியும். குறிப்பிட்ட பயிர்கள் மற்றும் நோய்களுக்கு குறிப்பிட்ட, கரைசல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் பயிர் மற்றும் நோய் பொறுத்து பொருட்களை தேர்வு செய்ய வேண்டும். பாசன நீருடன் (பொடிகள் மற்றும் ஆர்கியபாக்டீரியல் கரைசல்) கலந்து அளிப்பதற்கு முன் ஒரு நாள் நொதிக்க விட வேண்டும்.

மேலே உள்ள ஐந்து கலவைகளை ஒவ்வொன்றாக பயன்படுத்துதல், மண் வளத்தை அதிகரித்து மற்றும் மண்ணில் அனைத்து நன்மை தரும் உயிரினங்கள் எண்ணிக்கை அதிகரிக்க ஒரு நல்ல மற்றும் எளிய முறையாகும்.

செறிவூட்டப்பட்ட அமுத கரைசல்

தேவையான பொருட்கள்

5 லிட்டர் கோமியம்

1 கிலோ சாணம்

1 லிட்டர் பழ சாறு

தயாரிப்பு

சிறுநீர் மற்றும் பழ சாற்றை முற்றிலும் சாணத்துடன் நன்றாக கலக்கவும். கலவையை ஐந்து நாட்கள் வைத்திருக்கவும்.

இது வெளிப்புறத்தில் இருந்த பெறப்படும் வெல்லம் பயன்பாட்டைத் தவிர்க்க உதவுகிறது.

பயன்பாடு

பாசன முறையில் ஒரு ஏக்கருக்கு 20-30 லிட்டர் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த வளர்ச்சி கொடுக்கிறது

முட்டை அமிலம் தயாரிப்பு

தேவையான பொருட்கள்

5 முட்டை

10-15 எலுமிச்சை பழங்களின் சாறு

250 கிராம் வெல்லம் .

தயாரிப்பு

முட்டையை ஜாடியில் போட்டு முற்றிலும் மூழ்கும் வரை எலுமிச்சை சாறு ஊற்ற வேண்டும்.

பத்து நாட்கள் வரை மூடி வைக்கவும். பத்து நாட்களுக்கு பிறகு முட்டையை உடைத்து கரைசல் தயார் செய்ய வேண்டும்.

அடர்த்தியான வெல்லப் பாகை சம அளவு சேர்த்து பத்து நாட்களுக்கு வைத்து இருக்க வேண்டும்.

கரைசல் தெளித்தலுக்கு தயாராகி விடும்.

இது மீன் அமிலத்தைப் போன்று தாவரங்களுக்கு ஒரு சிறந்த ஊட்டச்சத்து மற்றும் தாவர வளர்ச்சியை தரும்.

பயன்பாடு

ஒன்று முதல் இரண்டு மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீருடன் சேர்த்து தெளிக்கலாம்.

அரப்பு – மோர் கரைசல் தயாரிப்பு முறை

தேவையான பொருட்கள்

5 லிட்டர் மோர்,

1 லிட்டர் இளநீர்,

1-2 கிலோ அரப்பு இலைகள் (அல்லது, 250-500 கிராம் இலை தூள்),

500 கிராம் பழ கழிவுகள் அல்லது பழ கழிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட 1 லிட்டர் சாறு.

தயாரிப்பு

மோர் மற்றும் இளநீரை நன்கு கலக்கவும். இலைகளை நன்கு நொறுக்கவும். பழகழிவுகளைப் பயன்படுத்தி இருந்தால் அதனை நொறுக்கப்பட்ட இலைகளுடன் சேர்த்து நைலான் வலையில் இந்த கலவையை வைத்து கட்டி வைக்கவும்.

வாழையை இளநீர் – மோர் கரைசலில் மூழ்குமாறு வைக்கவும். ஏழு நாட்களில் நொதித்து விடும்.

நைலான் வலையை பயன்படுத்துவதன் மூலம் தெளிக்கும்போது வடிகட்டும் அவசியத்தை தவிர்க்க முடியும்.

நீங்கள் அரப்பு இலை தூள் பயன்படுத்துவதாக இருந்தால், பழ கலவைகளுக்கு பதிலாக பழச்சாறு பயன்படுத்த வேண்டும்.

நான்கு பொருட்களையும் கலந்து அதனை ஏழு நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.

குறிப்பு

விவசாயிகளுக்கு செயல்முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பதால்தான், இங்கு பழ சாற்றுக்கு மாற்றாக பழக்கழிவும், இலைப்பொடிக்கு மாற்றாக அரப்பு இலைகளும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அரப்பு கிடைக்கவில்லை என்றால், அதற்கு பதிலாக சோப் நட்டு விதை தூள் பயன்படுத்தலாம். இதனை சோப்பு நட்டு-மோர் கரைசல் என்று அழைக்கலாம். தாவரங்கள் நொதிக்கும் போது ஒட்டும், பசை போன்ற திரவத்தை வெளியிட செய்கிறது. மோருடன் இந்த திரவத்தை சேர்த்தால் புளித்து விட கூடும். செம்பருத்தி இலைகள், காட்டுக்கொடி, பசலை (கீரைகள்), அவரை, மிருதுவான வெற்றிலை, மற்றும் பலாப்பழத்தின் தடித்த தோல் (வெளி தோல்) உதாரணங்களாகும்.

பயன்பாடு

500மில்லி முதல் 1 லிட்டர் கரைசலை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இது தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது, பூச்சிகளை தடுக்கிறது, மற்றும் பூஞ்சை நோய்களுக்கு எதிர்ப்பு தன்மை உருவாகிறது. இந்த கரைசலானது கிப்பெரெளிக் அமிலம் போன்ற திறன் வாய்ந்தது.

மோர் கரைசல்– மேம்படுத்தப்பட்ட முறை

இந்த மோர் கரைசல் ஒரு எளிதான மற்றும் மேம்படுத்தப்பட்ட முறையாகும். முந்தைய இளநீர் மோர் கரைசல் மற்றும் அரப்பு மோர் கரைசல் போன்று இதற்கும் அதே பயன்கள் உள்ளன.

தேவையான பொருட்கள்

மோர் 4 லிட்டர்

இளநீர் 1 லிட்டர்

பப்பாளி பழ கூழ் 250மில்லி

மஞ்சள் தூள் 100 கிராம்

பெருங்காயம் தூள் 10 முதல் 50 கிராம்

வேம்பு

துளசி

அரப்பு

சீதாப்பழம்

நொச்சி

கற்றாழை மற்றும் புதினா

இந்த இலைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மேலே உள்ள கரைசலில் கலந்து விடவும். இதனை 7 நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.

இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு

பின்வரும் பண்புள்ள இலை தழைகள் பூச்சிகளை விரட்டப் பயன்படும்.

ஆடு, மாடுகள் உண்ணாத இலை, தழைகள் – ஆடுதொடாத் தழை

ஒடித்தால் பால் வரும் இலை, தழைகள் – எருக்கிலை

கசப்பு சுவைமிக்க இலை, தழைகள் – சோற்றுக்கற்றாழை

மேற்படி மூன்று இலைகளையும் தழைகளையும் வகைக்கு ஒரு கிலோ என்று இரண்டு கிலோ வீதம் எடுத்துச் சிறு துண்டுகளாக நறுக்கி, பின்னர் இடித்து ஒரு டிரம்மில் இடவும்.

அத்துடன் மஞ்சள் தூள் 50 முதல் 100 கிராம் சேர்த்து, மாட்டு சிறுநீரில் 15 லிட்டர், சாணம் ஒரு கிலோ ஆகிய அனைத்தும் சேர்த்து நன்கு கலக்கி கரைசல் தயாரித்து டிரம்மில் உள்ள இடித்த இலைகள் மீது ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாரம் ஊறவிட வேண்டும். இது நன்கு ஊறிய பிறகு, அதன் சாற்றை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை

அனைத்து வகைப் பயிர்களுக்கும் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வடிகட்டிய சாறு என்ற அளவில் கலந்து மாலை நேரம் தெளித்தால் பூச்சிகள் கட்டுப்படும்

இ.எம் தயாரிப்பு

ஒரு ஏக்கருக்கு தேவையான கலவை தயாரிக்கத் தேவைப்படும் பொருட்கள்

பப்பாளி-1 கிலோ

பரங்கி-1 கிலோ

வாழைப்பழம்-1 கிலோ

நாட்டுச்சர்க்கரை-1 கிலோ

முட்டை-1

செய்முறை

பழங்களைத் தோலோடு சேர்த்து சிறிதுசிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

வாய் குறுகலான மண் அல்லது பிளாஸ்டிக் கேனில் இவற்றைப் போடவும்.

முட்டையை உடைத்து, ஓடுகளையும் சேர்த்து அதில் போட்டுவிடவும்.

இந்தக் கலவை முழ்கும் வரை தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

பிறகு, காற்று உள்ளே போகாமல் இறுக்கி மூடிவிடவும்.

15 நாட்கள் கழித்து திறந்து பார்க்கும்போது கலவையின் மீது வெண்மையான நிறம் தோன்றியிருந்தால் இ.எம். நுண்ணுயிரிகள் வேகமாக வளர்கின்றன என்று அர்த்தம். அப்படி இல்லாவிட்டால், ஒரு கைப்பிடி நாட்டுச் சர்க்கரையை போட்டு மூடிவைத்து விடவும்.

அடுத்த 15-ம் நாள், அதாவது 30-ம் நாள் இ.எம் தயார். 10 லிட்டர் நீருடன் 500 மில்லி இ.எம். கலந்து தெளிக்கலாம்.

இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் தயாரிப்பு

தேவையானவை

இஞ்சி – அரை கிலோ

பூண்டு – ஒரு கிலோ

பச்சைமிளகாய் – அரை கிலோ

காதி சோப்

செய்முறை

பூண்டு எடுத்து கெரசினில் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் இதனை எடுத்து நல்ல விழுதாக வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி எடுத்து தனித்தனியாக விழுது பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் இவ்வாறு தனித்தனியாக அரைத்த விழுதுகளை நன்றாக கலந்து ஒரு காடா துணியில் வைத்துக்கொள்ள வேண்டும். (ஜிலேபி பிழிவது போல் வைத்துக்கொள்ள வேண்டும்).

இவ்வாறு தயார் செய்த காடா துணியில் வைக்கப்பட்ட கலவையை 6 லிட்டர் தண்ணீரில் முக்கி ரசத்தை வடிக்கவும். இப்போது நமக்கு 6 லிட்டர் கரைசல் தயார். இந்த கரைசலை பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தால் 500 மில்லியும், தாக்குதல் அதிகமாக இருந்தால் 1 லிட்டரும் எடுத்து முறையே 9.5 மற்றும் 9 லிட்டர் தண்ணீரில் கலந்து பூச்சிகள்/செடிகள் மீது தெளித்தால் புழு வகை பூச்சிகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.

காதி சோப்பை தண்ணீரில் கரைத்து அடித்தால் அது நாம் அடிக்கும் இயற்கை பூச்சிமருந்து கரைசலை செடியின் மீது ஈர்த்து வைத்துக்கொள்ள உதவும்.

இதன்மூலம் இக்கரைசலின் வீரியமும் அதிக நேரம் செடியில் இருக்கும். இதை தயார் செய்யும்போது கைக்கு கையுறை தேவை. இல்லையெனில் கை எரிச்சல் அதிகமாக இருக்கும்.

கற்பூரம் இயற்கை பூச்சிவிரட்டி தயாரிப்பு

தேவையானவை

வேப்பெண்ணெய் -100 மில்லி

கோமியம் – ஒரு லிட்டர்

கற்பூரம் – 10 வில்லை

சோப்பு

தயாரிப்பு முறை

வேப்பெண்ணெய்யை தண்ணீரில் கரையும் நிலைக்கு கொண்டு வந்த பின்னர், சோப்பு கரைசல் வேப்பெண்ணெய்யுடன் கலந்தால் அடுத்த நிலைக்கு அவை வரும்.

கற்பூரம் தண்ணீரில் கரையாது என்பதால் கரும்பு கழிவுப் பாகில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் கொண்டும் கரைக்கலாம்.

நெற்பயிரில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். கத்திரி பயிரில் தண்டு துளைப்பான், காய்துளைப்பான் ஆகியவற்றையும், மல்பரி, பப்பாளியில் மாவுப்பூச்சியையும் கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்டதாகும்.

நெற்பயிரில் குருத்துப் பூச்சி, இலை சுருட்டுப் பூச்சி ஆகியவற்றை வெகுவாகக் கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்டதால் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும்.

பருத்திப் பயிரில் அனைத்துவகைப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மை உடையது, இந்த இயற்கை பூச்சிவிரட்டி.

வெங்காயத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நுனிகருகல் நோய்க்கு ஒரு தடவை இயற்கை பூச்சி விரட்டியைப் பயன்படுத்தினால், அறுவடை வரை நோய் பாதிப்பு இருக்காது. வெண்டை மற்றும் உளுந்து பயிர்களில் மஞ்சள் வைரஸ் நோய் முற்றிலும் கட்டுப்படுத்தும் தன்மை இந்த இயற்கை பூச்சிவிரட்டிக்கு உள்ளது.

வேர்க்கடலை பயிரில் தொடக்கம் முதலே தெளிக்கும்போது பூச்சிகள் தாக்குதலே இருக்காது. பயிர்களில் பூச்சிகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது.

அக்னி அஸ்திரம் தயாரிப்பு

தேவையான பொருட்கள்

புகையிலை – அரை கிலோ

பச்சை மிளகாய் – அரை கிலோ

பூண்டு – அரை கிலோ

வேம்பு இலை – 5 கிலோ

பசுமாட்டு சிறுநீர் – 15 லிட்டர்

தயாரிக்கும் முறை

இதை நான்கு முறை அரைத்து கரைக்கவேண்டும்.

நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும்.

48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம்.

இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

பூச்சி விரட்டி கரைசல் தயாரிப்பு முறை

தேவையானவை

கசப்பு சுவையுள்ள (வேம்பு) 2 கிலோ

பாலுள்ள செடி (எருக்கு இலை) 2கிலோ

துவர்ப்பு சுவையுள்ள செடி 2 கிலோ

கொய்யா இலை 1/2 கிலோ

கரும்பு வெல்லம் அல்லது கருப்பட்டி 1/2 கிலோ

செய்முறை

இலைகளை உரலில் இட்டு ஆட்டி 10 லிட்டர் கோமியத்தில் கலக்க வேண்டும்.

1/2 கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி தண்ணீரில் கரைத்து மேற்கண்ட கரைசலுடன் சேர்த்து தயாரிக்க வேண்டும்.

நிழலான இடத்தில் மூடி வைக்க வேண்டும்.

இரண்டு நாள் கழித்து வடிகட்டி 1லிட்டர் கரைசலுடன் 10 லிட்டர் நீர் சேர்த்து தாவரங்களின் இலைகளில் தெளிக்க வேண்டும். அடர்த்தியான இலைப்பகுதிகளில் இக்கரைசலை ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.

5 கிராம் காதி சோப்புக் கரைசலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தடவை தெளிக்கும் போது வேறு மூன்று, நான்கு ரக இலைகளை மேற்கண்டவாறு ஊறப்போட்டு 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் சேர்த்துக் சோப்புக் கரைசலையும் சேர்த்து தெளிக்க வேண்டும்.

இயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள்

வேம்பு

இதன் பாகங்களான இலை, பூ, விதை, பட்டை போன்றவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகித்தாலும் வேப்பங்கொட்டையானது ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வேம்பு 350 வகையான பூச்சிகளையும், 15 வகையான பூஞ்சாணங்களையும், 12 வகையான நூற்புழுக்களையும், 2 வைரஸ் கிருமிகள் மற்றும் 2 வகையான நத்தைகளையும் கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுவதால் இதை மக்கள் சர்வலோக நிவாரணி, இயற்கை கொடை, அதிசய மரம் மற்றும் கிராம மருந்தகம் என அழைக்கின்றனர்.

வேம்பின் கசப்புத் தன்மைக்கு காரணம் அசாடிராக்டின் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

அசாடிராக்டின் சுமார் 550 வகையான பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.

இவை பூச்சிகள் பயிர்களை உண்பதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் பூச்சிகள் முட்டையிடுவதையும், முட்டையில் இருந்து இளம் பூச்சிகள் வெளியே வருவதையும் தடுக்கின்றன. பூச்சிகளின் வளர்ச்சியையும் பாதிக்கிறது.

இவை அந்துப் பூச்சிகள், வண்ணத்துப் பூச்சிகள், வண்டுகள், கூன் வண்டுகள், ஈக்கள், எறும்புகள், குளவிகள் நாவாய் பூச்சிகள், வெட்டுக் கிளிகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் கரையான்கள் போன்ற பூச்சிகளின் வளர்ச்சி மாற்றத்தைப் பாதிக்கின்றன.

மேலும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு நோய்களைப் பரப்பக்கூடிய ஈக்கள், உண்ணிகள், பேன்கள் மற்றும் சிலந்திகளைக் கட்டுப்படுத்துவதில் அசாடிராக்டின் பயன்படுத்தப்படுகிறது.

விவசாயப் பயிர்கள்

நெற்பயிரில் வேப்பெண்ணெய் 1 சதம் (10 மிலி-லிட்டர்) அல்லது வேப்பங் கொட்டைச் சாறு 5 சத கரைசலை தெளிக்கும்போது இலைச் சுருட்டுப் புழுவின் தாக்குதல் குறைகிறது.

வேப்பங் கொட்டைச்சாறு 5 சத கரைசலைத் தெளிப்பதால் புகையானின் வளர்ச்சி பருவமானது பாதிக்கப்படுகிறது.

மேலும் அதன் உருவம் மற்றும் எடையிலும் மாற்றம் ஏற்படுகிறது. வேப்பெண்ணெய் (3 சதம்) நெற்பயிரை கதிர் நாவாய்ப் பூச்சிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது.

கொண்டைக் கடலையில் வேப்பங்கொட்டைச்சாறு அல்லது வேப்பெண்ணெய் (5 சதம்) தெளிப்பதால் காய்த் துளைப்பானின் தாக்குதல் வெகுவாகக் குறைகிறது.

அசாடிராக்டின் கலந்த மருந்தை தெளிக்கும்போது காய்த்துளைப்பானின் தாக்குதலானது 90 சதவீதம் வரை குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

வேப்பங்கொட்டைச்சாறு துவரையில் காய்த் துளைப்பான்களையும், தட்டைப் பயிரில் அசுவினியின் தாக்குதலையும் குறைக்கிறது.

நிலக்கடலையில் இலைத் துளைப்பானைக் கட்டுப்படுத்துவதில் வேம்பு சார்ந்த மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வேப்பெண்ணெய் மற்றும் வேப்பங்கொட்டைச்சாறு தெளிக்கப்பட்ட இலைகளை தொடர்ந்து உண்பதால் நிலக்கடலையில் சிவப்பு கம்பளி புழுவானது குறைந்து விடுவதாக ஆராய்ச்சியில் தெரிவிக்கின்றன.

நன்மைகள்

வேம்பு மற்றும் வேம்பு சார்ந்த பொருட்களால் சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

வேம்பானது பூச்சிகளை கொல்வதில்லை. மாறாக பூச்சிகளின் வளர்ச்சி பருவத்தைப் பாதிக்கின்றன.

இவை நன்மை செய்யும் பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மீன்கள் மற்றும் தேனீக்களை எதுவும் செய்வதில்லை.

வேம்பு சார்ந்த பொருள்களுக்கு பூச்சிகள் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கிக் கொல்வதில்லை.

இதனை செயற்கையாகத் தயாரிக்கப்படும் மருந்துகளுடன் கலந்தும் தெளிக்கலாம்.

வேம்பானது எளிதில் கிடைக்கக் கூடியது மற்றும் வேம்பு சார்ந்த மருந்துகளின் விலையும் மிகவும் குறைவு.

எனவே ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் வேம்பு மற்றும் அதனைச் சார்ந்த மருந்துகளைப் பயன்படுத்தி இயற்கைக்கு எவ்வித சேதாரமும் இல்லாமல், நன்மை செய்யும் பூச்சிகளையும் பாதிக்காமல் இயற்கையுடன் ஒருங்கிணைந்து பூச்சிகளை கட்டுப்படுத்தி அதிக லாபம் ஈட்டலாம் .

காலை நேரக் கரிசாலை பானம் தயாரிப்பு முறை

காலையில் பல் துலக்கிய பின்னர் மஞ்சள் கரிசாலை இலைகளை நன்கு மென்று தின்றுவிட்டு, அதன் சாரம் உள்ளே போகும்படி பல்லில் தேய்க்கவும். பிறகு வாய் கழுவ வேண்டும்.

தேவையான பொருட்கள்

உலர்ந்த மஞ்சள் கரிசாலை இலை – 100 கிராம்

உலர்ந்த முசுமுசுக்கை இலை – 25 கிராம்

உலர்ந்த தூதுவளை இலை – 25 கிராம்

சீரகம் – 25 கிராம்

ஆகியவற்றை வீட்டில் உள்ள மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து ஒரு மெல்லிய சீலைத்துணியில் வடிகட்டி காற்றுப் புகாத ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும். காலையில் இக்கலவையில் ஒரு தேக்கரண்டி (5 கிராம் அளவு) எடுத்து 100 மில்லி பசும்பாலில் (பாக்கெட் பால் வேண்டும்) கலந்து அதனுடன் 100 மில்லி தண்ணீர் சேர்த்து சுண்டக் காய்ச்சி நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடித்து வரலாம்.

இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் இரைப்பு (ஆஸ்துமா), மூக்கடைப்பு (சைனஸ்) முதலிய நுரையீரல் தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகும். இரும்புச்சத்துக் குறைபாடு, சோகை முதலிய பிணிகள் குணமாகும். நரம்புத்தளர்ச்சி நீங்கி உடலும், உள்ளமும் வலிமை அடையும்.

நமது நாட்டில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமாகி, இன்று அனைவரது வீடுகளிலும் நிறைந்து இருக்கும் காபி, தேநீர்க்குப் பதிலாக, இக்காலை பானத்தை பழக்கப்படுத்திப் பார்க்கலாம். இதோடு பாரம்பர்ய உணவுத் திருவிழாக்கள் கொண்டாடுவோர் இப்பானத்தை மக்களிடையே அறிமுகப்படுத்தலாம்.

போலி மஞ்சள் கரிசாலை

எல்லாவற்றிலும் போலி உருவாகிவிட்டது போல, மஞ்சள்கரிசாலைப் பூவைப் போலவே பூக்கக்கூடிய Wedelia trilobata (L) hitch என்ற ஒரு தாவரம் வெளிநாடுகளில் இருந்து நமக்கு அறிமுகமாகி, மஞ்சள் கரிசாலை என்று மக்களால் அழைக்கப்படுகிறது. இந்த போலி மஞ்சள் கரிசாலை மிகவும் வேகமாக வளர்ந்து படர்ந்து இடத்தை எல்லாம் அடைத்துப் பிற தாவரங்களை வளரவிடாமல் தடுப்பதால் ‘இண்டர்நேஷனல் யூனியன் ஃபார் கன்சர்வேஷன் ஆஃப் நேச்சர்’ (International Union for Conservation of Nature) எனும் அமைப்பால் இந்தத் தாவரம் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்